இந்தியாவில் 5¾ கோடி பேர் பூஞ்சை தொற்றால் பாதிப்பு ஆய்வில் தகவல்


இந்தியாவில் 5¾ கோடி பேர் பூஞ்சை தொற்றால் பாதிப்பு ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 5 Jan 2023 2:15 AM IST (Updated: 5 Jan 2023 2:16 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் 5¾ கோடிக்கும் அதிகமானோர் கொடிய பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் 5¾ கோடிக்கும் அதிகமானோர் கொடிய பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் பூஞ்சை தொற்று அடிக்கடி காணப்படுகிறது. ஆனால் அதன் பரவல் ெதளிவாக வரையறுக்கப்படவில்லை. இதில் முதல் முறையாக நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு முதல் முறையாக பூஞ்சை நோய் குறித்த பாதிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

டெல்லி மற்றும் மேற்கு வங்காள எய்ம்ஸ், சண்டிகாரின் ஜிமர் போன்ற உயர் மருத்துவ நிறுவனங்களை சேர்ந்த ஆய்வாளர்களும், இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு முடிவுகள் தொற்று நோய்கள் குறித்த ஆய்வு பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இதில் நாடு முழுவதும் 5 கோடியே 72 லட்சத்து 50 ஆயிரத்து 826 பேர் பல்வேறு வகையான கொடிய பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது இந்திய மக்கள் தொகையில் 4.4 சதவீதம் ஆகும்.

இதில் 10 சதவீதம் பேர் அச்சுறுத்தும் கொடிய தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 2.4 கோடி பெண்கள் பிறப்புறுப்பு தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதைப்போல டினியா கேப்பிட்டிஸ் எனப்படும் முடிப்பூஞ்சை தொற்றால் இதே எண்ணிக்கையிலான பள்ளி செல்லும் சிறுவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

2.5 லட்சம் பேரைப் பாதித்த நுரையீரல் மற்றும் சைனஸ் பூஞ்சை தொற்றுகள் மரணத்திற்கு முக்கிய காரணமாகி இருக்கிறது.

மேலும் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் நாள்பட்ட சுவாச மண்டல தொற்றாலும், 35 லட்சம் பேர் தீவிர ஒவ்வாமை நுரையீரல் தொற்றாலும் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வில் தெரியவந்து இருக்கிறது.

பூஞ்சை நோய்களால் ஏற்படும் மொத்த சுமை மிகப்பெரியது எனவும், ஆனால் குறைவாக மதிப்பிடப்படுவதாகவும் இந்த ஆய்வாளர் குழுவின் தலைவரும், டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டருமான அனிமேஷ் ராய் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு காசநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 30 லட்சத்துக்கு மேல் உள்ள நிலையில், பூஞ்சை தொற்றுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதாகவும் அவர் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.


Next Story