ஜார்கண்ட்: தனியார் வங்கியில் இருந்து ரூ.57 லட்சம் மாயம் - போலீசார் விசாரணை
ஜார்கண்டில் தனியார் வங்கியில் இருந்து ரூ.57 லட்சம் மாயமானதையடுத்து காசாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லோஹர்டகா,
ஜார்கண்ட் மாநிலம் லோஹர்டகா மாவட்டத்தில் உள்ள குத்ரி பஜார் பகுதியில் உள்ள தனியார் வங்கியின் பெட்டகத்தில் இருந்து 57 லட்சம் ரூபாய் பணம் காணாமல் போனதையடுத்து காசாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தப்பி ஓடிய மற்றொரு வங்கி அதிகாரியை போலீசார் தேடி வருகின்றனர்.
முன்னதாக, டிசம்பர் 9-ம் தேதி அன்று வேலை நேரம் முடிந்ததும் மொத்தம் ரூ. 2,49,72,420 கணக்கிட்டு வங்கி பெட்டகத்தில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 12-ம் தேதி அன்று வங்கியின் உள் தணிக்கை துறையினர் அந்த கிளையில் ஆய்வு செய்தபோது ரூ. 1,92,16,801 மட்டுமே பெட்டகத்தில் இருந்தது.
வங்கியின் பெட்டகத்தில் இருந்து ரூ.57.5 லட்சம் பணம் மாயமானதையடுத்து வங்கியின் கிளை மேலாளர் ஸ்வேதாப் ரஞ்சன், காசாளர்களான தீரஜ் பார்தி மற்றும் சுபோஜித் டே மீது சதர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
முதன்மை காசாளர் தீரஜ் பார்தியை சனிக்கிழமை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள உதவி காசாளர் சுபோஜித் டேவைக் கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.