பாகிஸ்தான் பெண்ணுக்கு 6 மாதம் சிறை; கார்வார் கோர்ட்டு தீர்ப்பு
விசாவை புதுப்பிக்க அனுமதியின்றி டெல்லி சென்ற பாகிஸ்தான் பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து கார்வார் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மங்களூரு:
டெல்லிக்கு சென்றார்
கார்வார் மாவட்டம் பட்கல் பகுதியை சேர்ந்தவர் இலியாஸ். இவர் பாகிஸ்தானை சேர்ந்த நசிரா ப ர்வீன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் வெளிநாட்டிற்கு செல்வதற்காக தங்களிடம் இருந்த விசாவை புதுப்பித்து கொள்ள முடிவு செய்தனர். பாகிஸ்தானை சேர்ந்த பெண் என்பதால் அவரது விசாவில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் முன்னதாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுக்க வேண்டும்.
இது விசா நடைமுறையில் முக்கிய வழிமுறையாகும். ஆனால் அதனை பொருட்படுத்தாமல், இலியாஸ், தனது மனைவியின் விசாவை புதுப்பிப்பதற்காக அவரை டெல்லிக்கு, ரகசியமாக அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து பட்கல் டவுன் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்காமல், சட்டவிரோதமாக டெல்லிக்கு சென்று விசாவை புதுப்பிக்க முயன்றதற்காக இலியாஸ் மற்றும் அவரது மனைவி நசிரா பர்வீன் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
6 மாதம் சிறை
அவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கார்வார் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அவர்கள் 2 பேர் மீது போலீசார் தரப்பில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, மனைவிக்கு விசாவை புதுப்பித்து கொடுப்பதற்காக டெல்லி சென்ற இலியாஸ் இதுகுறித்து போலீசாரிடம் முறையாக தகவல் கொடுக்காமல் இருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஒரு மாத சிறை தண்டனையும், அவரது மனைவியான பாகிஸ்தானை சேர்ந்த நசிரா பர்வீனுக்கு 6 மாதம் சிறை தண்டனையும் விதித்தார். மேலும், இருவரும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.