ஆன்லைன் வர்த்தகம் மூலம் வரும் பார்சல்களும் கண்காணிக்கப்படும்
உடுப்பி மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த இனிமேல் ஆன்லைன் வர்த்தகம் மூலம் வரும் பார்சல்களும் கண்காணிக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் மச்சீந்திரா கூறினார்.
மங்களூரு:-
போதைப்பொருள் நடமாட்டம்
உடுப்பியில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் இதுபற்றி விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் மச்சீந்திரா உத்தரவிட்டார். இதுதொடர்பாக நேற்று அவர் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மணிப்பால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்படுத்துதல் தொடர்பான பல வழக்குகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் தான். எனவே, அந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட கல்வி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தோம்.
2 மாணவர்கள் இடைநீக்கம்
அதன்பேரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 2 மாணவர்களை அந்தந்த கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. மற்ற கல்லூரி அதிகாரிகளும் இதேபோல் மாவட்ட காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடந்த 6 மாதங்களாக போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை 2 மாணவர்களும் இடைநீக்கத்தில் இருப்பார்கள்.
இதுபோன்ற குற்றச்செயல்களில் யாரேனும் சிக்கிக் கொண்டால், அவர்கள் எந்த நிறுவனத்தாலும் ஆதரிக்கப்பட மாட்டார்கள் என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.
ஒழுங்கு நடவடிக்கை
மற்ற கல்வி நிறுவனங்களும் இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் சிக்கும்போது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிப்பால் மருத்துவக்கல்லூரியில் படித்து வரும் வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தனது சொந்த நெட்வொர்க் மூலம் கஞ்சாவை பார்சல் மூலம் கொண்டு வந்துள்ளார்.
அந்த மாணவரை பிடித்து விசாரித்து வருகிறோம். மேலும் மணிப்பால் மருத்துவக்கல்லூரி நிர்வாகமும் அந்த மாணவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இனிமேல் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஆன்லைன் வர்த்தகம் மூலம் வரும் பார்சல்களும் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.