கட்சி மேலிடத்தின் முடிவுக்கு தலைவணங்க வேண்டும்- வீரப்ப மொய்லி பேட்டி


கட்சி மேலிடத்தின் முடிவுக்கு தலைவணங்க வேண்டும்-  வீரப்ப மொய்லி பேட்டி
x

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கட்சி மேலிடத்தின் முடிவுக்கு தலை வணங்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

மைசூரு:-

தலை வணங்க வேண்டும்

மைசூருவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முன்னாள் முதல்-மந்திரி வீரப்ப மொய்லி நேற்று ரெயில் மூலமாக மைசூருவுக்கு வந்தார். மைசூரு ரெயில் நிலையத்தில் அவர் நிருபர்களுக்க பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மந்திரி பதவி கிடைக்காததால் மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத், தனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள், சித்தாந்தங்கள் பி.கே.ஹரிபிரசாத்துக்கு நன்கு தெரியும். இதனால் அவருக்கு நான் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. காங்கிரஸ் மேலிடம் பழைய தலைவர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது. இதனால் அதிருப்தி ஏற்படுவது சகஜம் தான். கட்சியின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டாக வேண்டும். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்கு தலை வணங்க வேண்டும்.

நல்லாட்சி

முதல் கட்டத்தில் மந்திரி பதவி கிடைக்காதவர்களுக்கு 2-வது கட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும். அதுவரை காத்திருக்க வேண்டும். அவசரப்படக்கூடாது. 5 இலவச திட்டங்கள் கட்டாயம் நிறைவேற்றப்படும். இலவச திட்டங்களை கொடுப்பது அரசு, தனிப்பட்ட கட்சி கிடையாது. அந்த இலவச திட்டங்களை கொடுப்பதற்கு நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் உள்ளன. அதன் அடிப்படையில் வழங்கப்படும்.

மாநிலத்தின் முதல்-மந்திரியாக சித்தராமையா, துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் உள்ளனர். அதிகார பங்கீடு குறித்து எதற்காக பேச வேண்டும். மாநிலத்தில் பலமான அரசு உள்ளது. நாங்கள் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story