தலித், பழங்குடியின சமூகங்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிப்பு; அடுத்த கூட்டத்தொடரில் அவசர சட்டம் நிறைவேற்றம் - முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிப்புக்கான அவசர சட்டம் அடுத்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
இடஒதுக்கீடு அதிகரிப்பு
கர்நாடகத்தில் தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க பா.ஜனதா அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக கர்நாடக அரசு கடந்த 7-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தியது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்துக்கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று இருந்தார்கள். அப்போது தலித் சமூகத்திற்கு இடஒதுக்கீடு 15-ல் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடியின மக்களுக்கு 3-ல் இருந்து 7 ஆகவும் உயர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
மேலும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில், தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்துவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. 2 சமூகங்களுக்கும் இடஒதுக்கீடு உயர்த்தப்பட்டு இருப்பதற்கு ஒப்புதல் அளிக்கும்படி கவர்னருக்கு, கர்நாடக அரசு சிபாரிசு செய்திருந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களுக்கான இடஒதுக்கீடு உயர்வுக்கு கவர்னரும் ஒப்புதல் வழங்கினார்.
தீபாவளி பரிசு
இதுபற்றி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டு இருந்த அறிக்கையில், மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று நீதிபதி நாக மோகன்தாஸ் சிபாரிசு செய்திருந்தார். இதற்கு அரசும் சம்மதம் தெரிவித்ததுடன், மந்திரிசபை கூட்டத்தில் இடஒதுக்கீட்டை அதிகரிக்க அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த இடஒதுக்கீட்டுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இருந்த இடஒதுக்கீடு 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும், பழங்குடியின மக்களுக்கு 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. இது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு கர்நாடக அரசின் தீபாவளி பரிசாகும், என்று கூறி இருந்தார்.
இதுகுறித்து உப்பள்ளியில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
அடுத்த கூட்டத்தொடரில் நிறைவேற்றம்
கர்நாடகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் அந்த சமூக மக்களுக்குகு கூடுதல் இடஒதுக்கீடு கிடைக்கும். இந்த இடஒதுக்கீட்டுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கி இருப்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீடு அதிகரித்திருப்பதற்கான அவசர சட்டத்திற்கு மந்திரிசபையும் ஒப்புதல் அளித்துள்ளது.
எனவே அடுத்த சட்டசபை கூட்டத்தொடரின் போது 2 சமூகங்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிப்பு செய்ததற்கான அவசர சட்ட மசோதாவுக்கு சட்டசபையும், கர்நாடக மேல்-சபையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இதன்மூலம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசு வேலையிலும், கல்வி கற்பதிலும் முன்னுரிமை கிடைக்கும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.