சிறைக்கைதிகள் நன்னடத்தையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய சட்டம் சிறையில் செல்போன் பயன்படுத்தினால் தண்டனை


சிறைக்கைதிகள் நன்னடத்தையை ஊக்குவிக்க மத்திய அரசு புதிய சட்டம் சிறையில் செல்போன் பயன்படுத்தினால் தண்டனை
x
தினத்தந்தி 13 May 2023 4:45 AM IST (Updated: 13 May 2023 4:46 AM IST)
t-max-icont-min-icon

1900-ம் ஆண்டு இயற்றப்பட்ட கைதிகள் சட்டம், 1950-ம் ஆண்டு இயற்றப்பட்ட கைதிகள் இடமாற்ற சட்டம் ஆகியவையும் உள்ளன.

புதுடெல்லி,

130 ஆண்டுகள் பழமையான சிறைகள் சட்டத்துக்கு பதிலாக, கைதிகளின் நன்னடத்தையை ஊக்குவிக்கும்வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. அதில், சிறையில் செல்போன் பயன்படுத்தினால், தண்டனை விதிக்கும் உட்பிரிவும் உள்ளது.

சிறைகள், கைதிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள், 1894-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சிறைகள் சட்டத்தின்கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. 1900-ம் ஆண்டு இயற்றப்பட்ட கைதிகள் சட்டம், 1950-ம் ஆண்டு இயற்றப்பட்ட கைதிகள் இடமாற்ற சட்டம் ஆகியவையும் உள்ளன.

ஆனால், இந்த சட்டங்கள், கைதிகளை சிறைகளில் அடைப்பது, அங்கு ஒழுக்கத்தை அமல்படுத்துவது போன்றவற்றை பற்றி மட்டுமே பேசுகின்றன. கைதிகளின் மறுவாழ்வு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை.

எனவே, இந்த பற்றாக்குறையை கருதியும், தற்கால மாற்றங்களுக்கு ஏற்ற வகையிலும் புதிய சட்டத்தை உருவாக்குமாறு போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

அந்த அமைப்பும், மாநில சிறைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியும், பழைய சட்டங்களை ஆய்வு செய்தும் 'மாதிரி சிறைகள் சட்டம்-2023'-ஐ உருவாக்கி உள்ளது.

அந்த சட்டத்தில், கைதிகளுக்கு சட்ட உதவி அளிப்பதற்கான அம்சங்கள் உள்ளன. அவர்களின் நன்னடத்தையை ஊக்குவிக்கும்வகையில், பரோல், விடுமுறை அளிப்பது, முன்கூட்டியே விடுதலை செய்வது, தண்டனை குறைப்பு அளிப்பது போன்ற வழிவகைகளும் செய்யப்பட்டுள்ளன.

கைதிகளுக்கு தொழிற்பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவை அளிக்கப்பட உள்ளன. கைதிகளின் உடல்நலன், மனநலனில் அக்கறை, மறுவாழ்வு நடவடிக்கைகள் ஆகியவற்றிலும் அக்கறை செலுத்துகிறது.

கோர்ட்டுகளுடன் காணொலி காட்சி வசதி, உயர் பாதுகாப்பு சிறை, திறந்தவெளி சிறை ஆகியவை அமைப்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது.

சிறைகளில் செல்போன் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தினால் தண்டனை விதிப்பது பற்றியும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஒளிவுமறைவற்ற சிறை நிர்வாகத்துக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது.

இந்த சட்டம், மாநிலங்களுக்கும் வழிகாட்டும் ஆவணமாக அமையும் என்றும், தேவையான திருத்தங்களை செய்து மாநிலங்கள் இதை பயன்படுத்தலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.


Next Story