பிரதமர் மோடியின் சாவை விரும்பும் காங்கிரசுக்கு கர்நாடக மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்; உள்துறை மந்திரி அமித்ஷா பேச்சு


பிரதமர் மோடியின் சாவை விரும்பும் காங்கிரசுக்கு கர்நாடக மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்; உள்துறை மந்திரி அமித்ஷா பேச்சு
x

பிரதமர் மோடியின் சாவை விரும்பும் காங்கிரசுக்கு கர்நாடக மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

பெங்களூரு:

வீட்டுமனை பட்டா

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் 4 விஜய சங்கல்ப யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் முதல் யாத்திரையை சாம்ராஜ்நகரில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைத்தார். 2-வது யாத்திரையை பெலகாவியில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் 3-வது யாத்திரை தொடக்க விழா பொதுக்கூட்டம் பீதர் மாவட்டம் பசவ கல்யாணில் நேற்று நடைபெற்றது. இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு யாத்திரையை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடகத்தின் ரெயில்வே திட்டங்களுக்கு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வழங்கியதை விட 9 மடங்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது. லம்பானி சமூகத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்கி அவர்களுக்கு நீதி வழங்கியுள்ளோம். காங்கிரசில் ஒரு முதல்-மந்திரி பதவிக்காக 10 பேர் போட்டி போடுகிறார்கள். இவர்களால் கர்நாடகத்திற்கு நல்ல செய்ய முடியுமா?.

காங்கிரஸ் பலவீனம்

ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் பலவீனம் அடைந்து வருகிறது. பிரதமர் மோடி சாக வேண்டும் என்று காங்கிரசார் முழக்கமிடுகிறார்கள். ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோரின் விமர்சனங்களால் தாமரை இன்னும் மலர்ந்து கொண்டே இருக்கும். வளர்ச்சிக்கு எதிரான கட்சியான காங்கிரசை தோற்கடிக்க வேண்டும்.

மோடியின் சாவை விரும்பும் காங்கிரசுக்கு கர்நாடக மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். வட கர்நாடகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த பா.ஜனதா தயாராக உள்ளது. முந்தைய சித்தராமையா அரசு காங்கிரஸ் கட்சியின் ஏ.டி.எம். ஆக இருந்தது. காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் குடும்ப அரசியலை வலியுறுத்தும் கட்சிகள் ஆகும்.

ஓட்டு போட வேண்டும்

ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு போடும் ஓட்டுகள் வீணாகும். அது காங்கிரசுக்கு போட்டது போல் ஆகும். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் காங்கிரசுக்கு நீங்கள் ஓட்டு போட வேண்டாம். நாட்டில் 10 கோடி குடும்பங்களுக்கு கழிவறை கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. 13 கோடி பேருக்கு சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆயுஸ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தோம். காங்கிரஸ் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. ஆனால் எங்களுக்கு வாக்கு வங்கி முக்கியமல்ல. எங்களுக்கு நாட்டின் பாதுகாப்பு தான் முக்கியம். ராமர் கோவில் கட்ட தாமதமானதற்கு காங்கிரஸ் தான் காரணம். ஆனால் பிரதமர் மோடி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார்.

குடிநீர் இணைப்பு

காசி, கேதார்நாத், சோம்நாத் கோவில்களை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலைகள் மேம்பாடு, புதிய விமான நிலையங்கள் அமைத்தல், குடிநீர் இணைப்பு வழங்குதல், நீர்ப்பாசன திட்டங்களுக்கு அதிக நிதியை வழங்கியுள்ளோம். பசவண்ணர் ஜனநாயகம் குறித்து பேசினார். இதுகுறித்து பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபையில் பேசி அவருக்கு மரியாதை வழங்கினார்.

காங்கிரஸ் கட்சி கர்நாடக தலைவர்களை அவமதித்துள்ளது. இந்த மாநில தலைவர்களுக்கு உரிய மரியாதையை பா.ஜனதா வழங்குகிறது. பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தார். நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு கொண்டு வந்தவர் மோடி. ஒருவேளை காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கும்.

பொருளாதார நெருக்கடி

நாட்டில் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க கர்நாடக சட்டசபை தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற வேண்டும். ஊழல் என்றால் காங்கிரஸ். மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை காங்கிரஸ் அளிக்கிறது. சாதி-மதங்களை உடைக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. உண்மையான சமூக நீதியை பா.ஜனதா இட ஒதுக்கீடு மூலம் நிலை நாட்டியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 140 கோடி மக்களுக்கு தடுப்பூசியை பிரதமர் மோடி இலவசமாக வழங்கினார். இலங்கை, பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டு மக்கள், மோடியை போன்ற தலைமை தங்களுக்கு வேண்டும் என்று சொல்கிறார்கள். நாட்டில் காங்கிரஸ் கட்சி தொடர் தோல்விகளால் துவண்டுபோய் உள்ளது. கர்நாடகத்தில் காங்கிரசின் இறுதி யாத்திரை இந்த தேர்தலுடன் முடிவடையும். இந்த தேர்தலில் பா.ஜனதா முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பா.ஜனதா உயர்நிலைக்குழு உறுப்பினர் எடியூரப்பா, கட்சியின் தலைவர் நளின்குமார் கட்டீல், மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story