கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - சித்தராமையா பேட்டி
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி எப்போது வேண்டுமானாலும் தயாராக உள்ளது. சட்டசபை தேர்தலில் கருத்து கணிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி 130 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், தனிப்பெருமபான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரியவந்துள்ளது.
ஆனால் 150 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போதில் இருந்தே எடுத்து வருகிறது. எனவே 150 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தியுடன் கர்நாடக அரசியல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
நாங்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களையும் இழுக்க முயற்சி செய்யவில்லை. பா.ஜனதாவுக்கு தான் சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் இல்லை. மைசூரு, மண்டியாவில் பா.ஜனதா சார்பில்போட்டியிட வேட்பாளர்கள் உள்ளார்களா?. அதனால் தான் பிற கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களை இழுக்க முயற்சிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.