பெண் தாசில்தாரின் தனிப்பட்ட தகவலை கேட்ட ஆர்.டி.ஐ. பிரமுகர்
பெண் தாசில்தாரின் தனிப்பட்ட தகவலை ஆர்.டி.ஐ. பிரமுகர் கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா தாசில்தாராக இருந்து வருபவர் ஷோபிதா. இந்த நிலையில் தாசில்தார் ஷோபிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முல்பாகல் தாலுகா மண்டிகல் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் கேட்டு இருந்தார். அதில் தாசில்தார் ஷோபிதாவுக்கு திருமணம் ஆகிவிட்டதா?, எத்தனை முறை திருமணம் நடந்தது?, எத்தனை பேரை அவர் விவாகரத்து செய்துள்ளார்?, தற்போது யாருடன் அவர் வாழ்ந்து வருகிறார்? என்பன உள்பட பல்வேறு கேள்விகளை அதில் கேட்டு இருந்தார். இது அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி தாசில்தார் ஷோபிதாவுக்கும் தெரியவந்தது. அதிர்ந்து போன அவர் இதுபற்றி முல்பாகல் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் நாகராஜை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.