மாநில அரசுகள் சம்மதித்தால் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்கள் கொண்டுவரப்படும்-நிர்மலா சீதாராமன் உறுதி
மாநில அரசுகள் சம்மதித்தால், ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோலிய பொருட்கள் கொண்டுவரப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதுடெல்லி,
பெட்ரோலிய பொருட்கள், மதுபானம் போன்ற சில பொருட்கள் இன்னும் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை. முன்பு போலவே, உற்பத்தி வரி, உபரி வரி உள்ளிட்ட வரிகள்தான் விதிக்கப்பட்டு வருகின்றன.பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க அவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை பலதரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியில் தொழில் அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களுடன் உரையாடும் நிகழ்ச்சி நடந்தது. அதில், பெட்ரோலிய பொருட்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
மாநில அரசுகள் சம்மதம் தெரிவித்தால், பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர முடியும்.மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறோம். 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை அமல்படுத்துமாறு கூறி வருகிறோம்.கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக, வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கத்தில் பொது மூலதன செலவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இந்த பட்ஜெட்டிலும் அதை கடைபிடித்துள்ளோம். மூலதன செலவுதான் இந்த பட்ஜெட்டின் உண்மையான நோக்கம் ஆகும்.தற்போது தாக்கல் செய்யப்பட்ட 2023-2024 நிதி ஆண்டு பட்ஜெட்டில் மூலதன செலவுகள் 33 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.