ஜனதாதளம் (எஸ்) கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு
ஜனதாதளம் (எஸ்) கட்சியின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பவானி ரேவண்ணாவுக்கு டிக்கெட் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
2-வது கட்ட வேட்பாளர் பட்டியல்
கர்நாடக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனதாளதளம் (எஸ்) கட்சி 120 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பஞ்சரத்னா யாத்திரை நடைபெற்று வருகிறது. குமாரசாமி செல்லும் பகுதியெல்லாம், மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இதற்கிடையில், பஞ்சரத்னா யாத்திரை நடைபெறும் சந்தர்ப்பத்திலேயே ஜனதாதளம் (எஸ்) கட்சி ஏற்கனவே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருந்தது. 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பவானி ரேவண்ணாவுக்கு டிக்கெட்?
இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தயாரிப்பது குறித்து பெங்களூருவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாநில தலைவர் சி.எம். இப்ராகிம், குமாரசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற
உள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்து 2-ம் கட்ட பட்டியலை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக 2-வது கட்ட வேட்பாளர்கள் படடியலில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற உள்ளது.
ஹாசன் தொகுதியில் போட்டியிட குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணாவின் மனைவி பவானி ரேவண்ணா போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் அவருக்கு பதில் சொரூப் பிரகாசுக்கு டிக்கெட் வழங்க குமாரசாமி முடிவு செய்துள்ளார். இந்த விவகாரம் காரணமாக ஜனதாதளம் (எஸ்) யில் உட்கட்சி மோதலும், தேவேகவுடாவின் குடும்பத்திற்குள் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நடைபெறும் கூட்டத்தில் பவானி ரேவண்ணாவுக்கு டிக்கெட் டிக்கெட் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.