பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் அதிநவீன கேமராக்கள் பொருத்த திட்டம்
விபத்து, திருட்டை தடுக்க பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் அதிநவீன கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து நோட்டீஸ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:-
விரைவுச்சாலை
பெங்களூரு-மைசூரு இடையே 10 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 வழி விரைவுச்சாலையாகவும், 4 வழி சர்வீஸ் சாலையாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரைவுச்சாலையை கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதலே போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த சாலையில் கடந்த 6 மாதங்களில் 300-க்கும் மேற்பட்ட விபத்துகளில் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், விரைவுச்சாலையில் வாகன ஓட்டிகளிடம் கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வந்தது.
அதிநவீன கேமரா
இந்த நிலையில், விரைவுச்சாலையில் விபத்து மற்றும் திருட்டை தடுக்க தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்தது. இதற்காக உயர் தொழில்நுட்பங்களுடன் கூடிய அதிநவீன கேமராக்களை விரைவுச்சாலையில் பொருத்த நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு 800 மீட்டருக்கும் கேமராவை பொருத்தி வாகனங்களின் வேகத்தை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கேமராக்கள் மூலம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிவேகமாக செல்லும் வாகனங்களை படம் பிடித்து அந்த படத்துடன் வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். அத்துடன் அதிவேகமாக சென்றதாக அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படும்.
மேலும் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க இந்த கேமரா உதவியாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்களை பொருத்துவதற்காக விரிவான திட்ட அறிக்கையை நெடுஞ்சாலை துறை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
7 மாதங்களில்...
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் விபத்து மற்றும் திருட்டை தடுக்க உயர் தொழில்நுட்பங்களுடன் கூடிய அதிநவீன கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கேமரா வாகனங்களில் வேக கட்டுப்பாட்டிற்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி, விரைவுச்சாலையில்
திருட்டு சம்பவங்களை தடுக்கவும் உதவியாக இருக்கும். மேலும் விரைவுச்சாலையில் விபத்து ஏற்பட்டால் அருகில் உள்ள ஆம்புலன்ஸ், நெடுஞ்சாலை போலீசார், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் தொழில்நுட்பமும் இருக்கும்.
இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 7 மாதங்களில் விரைவுச்சாலையில் முழுவதும் கேமராக்கள் பொருத்தப்படும் என்றார்.