பெங்களூருவில் கூடுதல் போலீஸ் நிலையங்கள் அமைக்க திட்டம்
பெங்களூருவில் கூடுதல் போலீஸ் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு:-
பெங்களூரு நகரில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அவற்றை தடுக்கவும், மக்களை பாதுகாக்கவும் பெங்களூருவில் மட்டும் 114 சட்டம், ஒழுங்கு போலீஸ் நிலையங்கள் உள்ளன. மேலும், 44 போக்குவரத்து போலீஸ் நிலையங்களும், 2 மகளிர் மற்றும் 9 சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களும் உள்ளன. பெரிய எல்லைகளை கொண்ட போலீஸ் நிலையங்களில் 800 முதல் 1,000 வழக்குகள் பதிவாகின்றன. அவற்றை விசாரிப்பதால் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் கூடுதலாக போலீஸ் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து உள்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பெங்களூருவில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் நோக்கில் போலீசார் செயல்பட்டு வருகின்றனர். சில குற்றச்சம்பவங்களை விசாரிக்க கூடுதல் கால அவகாசம் ஆவதாக கூறப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு பெங்களூருவில் போலீஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூரு வடக்கு மண்டலத்தில் சோழதேவனஹள்ளி, பாகலகுண்டே அல்லது பீனியா பகுதிகளிலும், பேடரஹள்ளி, உத்தரஹள்ளி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், ஒயிட்பீல்டு, மாரத்தஹள்ளி அல்லது வர்த்தூர் பகுதிகளிலும் என மொத்தம் 10 போலீஸ் நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.