மங்களூருவில் 158 பேரை பலி கொண்ட விமான விபத்து: 12-ம் ஆண்டு நினைவஞ்சலி
மங்களூருவில் விமான விபத்தில் பலியான 158 பேருக்கு 12-ம் ஆண்டு நினைவஞ்சலி நேற்று அனுசரிக்கப்பட்டது.
மங்களூரு:
158 பேர் பலி
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பே பகுதியில் சா்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி காலை 6 மணிக்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் மங்களூருவில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது.
இதில் விமானம் வெடித்து சிதறி தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 166 பேரில் 158 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினார்கள். விமானத்தின் ஒரு பகுதி உடைந்ததால் 8 பேர் உயிர் தப்பினர். இந்த கோர சம்பவம் நடந்து 12 ஆண்டுகள் ஆகிறது.
நினைவஞ்சலி
இந்த விமான விபத்தில் இறந்தவர்களின் நினைவாக மங்களூரு அருகே கூலூரில் இருந்து தண்ணீர்பாவி செல்லும் சாலையில் நினைவு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று விமான விபத்தில் பலியானவர்களின் 12-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதில் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா, போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ், கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், தட்சிண கன்னடா தொகுதி எம்.பி.யுமான நளின்குமார் கட்டீல் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினரும், பொதுமக்களும் நினைவஞ்சலி
செலுத்தினர்.