ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வெளிநாடு பயணம்


ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வெளிநாடு பயணம்
x

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி நாளை மறுநாள் (புதன்கிழமை) உஸ்பெகிஸ்தான் செல்கிறார். அங்கு ரஷியா, சீன அதிபர்களை சந்தித்து பேசுகிறார்.

புதுடெல்லி,

உலகின் மிகப்பெரிய பிராந்திய பாதுகாப்பு, ஒத்துழைப்பு அமைப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு திகழ்ந்து வருகிறது.

8 நாடுகள் உறுப்பினர்கள்

இந்த அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இதன் பார்வையாளர்களாக உள்ள ஆப்கானிஸ்தான், பெலாரஸ், ஈரான் மங்கோலியா ஆகிய நாடுகள் முழு உறுப்பினர் ஆவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த அமைப்பில் பேச்சுவார்த்தை கூட்டாளிகளாக ஆர்மேனியா, அசர்பைஜான், கம்போடியா, நேபாளம், இலங்கை, துருக்கி உள்ளன.

நேரடி உச்சி மாநாடு

இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்ட உச்சி மாநாடு கடைசியாக 2019-ம் ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கேக் நகரில் நடந்தது. அதன் பின்னர் கொரோனா வந்து விட்டதால் இந்த அமைப்பின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறவில்லை.

தற்போது உலகமெங்கும் பெருமளவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் 15, 16 தேதிகளில் (வியாழன், வெள்ளி) நடைபெறுகிறது. அதில் உறுப்பு நாடுகளின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் விவாதிக்கப்படும். பயங்கரவாதத்துக்கு எதிராகவும், பொருளாதார ரீதியில் ஒத்துழைப்பது தொடர்பாகவும் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

பிரதமர் மோடி பங்கேற்பு

இந்த மாநாட்டில் உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் 14 நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை மறுதினம் (14-ந் தேதி) உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார். உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு அவர் 16-ந் தேதி டெல்லி திரும்புவார்.

இந்த மாநாட்டில பிரதமர் மோடியுடன் சீன அதிபர் ஜின்பிங்கும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் கலந்து கொள்வது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த மாநாட்டுக்கு பிற உறுப்பு நாடுகளின் தலைவர்களான பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பும், ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியும், அழைக்கப்பட்டுள்ளனர்.

சீன, ரஷிய அதிபர்களுடன் பேச்சு

இந்த மாநாட்டின் இடையே பிரதமர் மோடி, தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. ஆனாலும்கூட, ஒரே அரங்கிலும், ஒரே ஓய்வறையிலும் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க வாய்ப்பு உள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த பேச்சுவார்த்தை எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் பிரச்சினைக்கு உரிய கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இந்திய, சீன படைகள் விலக்கல் தொடங்கி உள்ளது. இதை இரு தரப்பு ராணுவமும் உறுதி செய்துள்ளன. இந்திய, சீன எல்லை மோதலில் இந்த நடவடிக்கை முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. இதனால் கடந்த 2½ ஆண்டுகளாக அந்த பகுதியில் நிலவி வந்த பதற்றம் தணியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சாதகமான தருணத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசுவது, இரு தரப்பு உறவில் நிலவி வந்த உரசல்களுக்கு முடிவு கட்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறபோது, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவும், உக்ரைனுடனான பிரச்சினைகளில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் மீண்டும் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா தலைமை ஏற்கும்

இந்த மாநாட்டின் முடிவில் சுழற்சி முறையிலான தலைவர் பொறுப்பை இந்தியா ஏற்கும். இந்த அமைப்பின் தலைவர் பொறுப்பில் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை இந்தியா தொடரும். எனவே அடுத்த வருடம் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை இந்தியா நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story