முறைகேடு புகார் எதிரொலி: பி.எம்.டி.சி. அதிகாரிகள் 18 பேர் பணி இடமாற்றம்


முறைகேடு புகார் எதிரொலி: பி.எம்.டி.சி. அதிகாரிகள் 18 பேர் பணி இடமாற்றம்
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், முறைகேடு புகார் எதிரொலியாக பி.எம்.டி.சி. அதிகாரிகள் 18 பேர் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

பெங்களூரு:

கவர்னருக்கு கடிதம்

பெங்களூருவில் பி.எம்.டி.சி. போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. இதில் தியாகராஜு என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் கத்ரிகுப்பே பணிமனையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தனது உயர் அதிகாரிகள் குறித்தும், அவர்கள் பெயரிலான முறைகேடுகள் குறித்தும், அவர்கள் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு கொடுக்கும் பணிச்சுமை, தொல்லை குறித்தும் டிரைவர் தியாகராஜு, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு கடிதம் எழுதினார்.

அந்த புகார் கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தீவிரமாக எடுத்துக் கொண்ட பி.எம்.டி.சி. நிர்வாகம் உடனடியாக டிரைவர் தியாகராஜுவை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இது தனக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும், இதுபற்றி தான் கர்நாடக ஐகோர்ட்டில் முறையிடப்போவதாகவும் டிரைவர் தியாகராஜு தெரிவித்துள்ளார்.

பணி இடமாற்றம்

இதற்கிடையே மெஜஸ்டிக் பஸ் நிலையம் உள்பட பெங்களூருவில் உள்ள பி.எம்.டி.சி. பஸ் நிலையங்களில் கடைகள் வைத்திருப்பவர்களுக்கு, அதிகாரிகளின் கையெழுத்தை போலியாக போட்டு உரிமங்களை புதுப்பித்து கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இந்த முறைகேட்டில் பி.எம்.டி.சி. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்ததாக தகவல்கள் வெளியாகின.

இதுபற்றி பி.எம்.டி.சி. நிர்வாக இயக்குனர் சத்தியவதி வில்சன்கார்டன் போலீசிலும் புகார் செய்திருந்தார். அதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் பி.எம்.டி.சி. போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வரும் 18 அதிகாரிகள் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

பணி இடைநீக்கம்

அவர்கள் அனைவரும் பெங்களூருவில் உள்ள பல்வேறு பி.எம்.டி.சி. அலுவலகங்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் பி.எம்.டி.சி.யின் முதன்மை போக்குவரத்து மேலாளர்(வணிகம்) ஸ்ரீராம் முல்கவனா மட்டும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

இந்த முறைகேட்டை முதலில் கண்டுபிடித்தவர் பி.எம்.டி.சி. லஞ்ச ஒழிப்பு அதிகாரி ரம்யா ஆவார். அவர் மூலம்தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story