காதலியை கடத்திய வழக்கில் சிறுவன் மீதான போக்சோ வழக்கு ரத்து; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


காதலியை கடத்திய வழக்கில் சிறுவன் மீதான போக்சோ வழக்கு ரத்து; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x

காதலியை கடத்திய வழக்கில் சிறுவன் மீது பதிவான போக்சோ வழக்கை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்து உள்ளது.

பெங்களூரு:

சிறுமி கடத்தல்

பெங்களூரு நகரில் 16 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்த சிறுவனும் 15 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு (2021) டிசம்பர் மாதம் சிறுவனும், அவனது காதலியும் வீட்டில் இருந்து வெளியேறினர். இந்த நிலையில் தங்கள் மகளை சிறுவன் கடத்தி சென்றதாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையே சிறுவனையும், அவனது காதலியையும் போலீசார் சிக்கமகளூருவில் வைத்து மீட்டனர்.

மேலும் சிறுமியை கற்பழித்ததாக சிறுவன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்த நிலையில் சிறுவன் மீது போலீசார் பதிவு செய்த போக்சோ வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் மாணவன் 10-ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் இணைக்கப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாகபிரசன்னா முன்பு நடந்து வந்தது.

வழக்கு ரத்து

இந்த வழக்கின் இறுதி விசாரணையின் போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், சிறுவன், சிறுமி குடும்பத்தினர் சமரசமாக செல்ல முடிவு செய்து உள்ளனர் என்றும், மாணவரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

அப்போது நீதிபதி நாகபிரசன்னா கூறும்போது, இளம் பருவத்தில் ஒரு பையனுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் காதல், மோகத்தால் ஏற்படுகிறது. அந்த காதல் மோகத்தால் பையன் போக்சோ வழக்கில் சிக்கி கொள்கிறான்.

ஆர்வத்தாலும், ஆசைகளாலும் பாலியல் செயல்கள் நடந்து விடுகிறது. இந்த வழக்கில் சிறுவனும், சிறுமியும் பாலியல் செயலில் ஈடுபட்டு உள்ளனர். ஆனாலும் அதை குற்றமாக கூறி விட முடியாது. போக்சோ சட்டம் பற்றி சிறுவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இருக்காது. இதனால் மாணவரின் நலனை கருத்தில் கொண்டு அவர் மீது பதிவான போக்சோ வழக்கை ரத்து செய்கிறேன் என்று கூறினார்.


Next Story