புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உஷாராக இருக்க போலீசாருக்கு அறிவுறுத்தல்


புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உஷாராக இருக்க போலீசாருக்கு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 27 Dec 2022 12:15 AM IST (Updated: 27 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை, மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவங்கள் எதிரொலியாக, பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தி இருப்பதாக போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.

பெங்களூரு:-

ஓட்டல் உரிமையாளர்களுடன் கூட்டம்

புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் போலீஸ் துறை செய்து உள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது. ஓட்டல்களின் உரிமையாளர்கள் எங்களுக்கு சில ஆலோசனைகள் வழங்கினர். அதை செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்து பிரச்சினையை சரிசெய்ய திட்டமிட்டு உள்ளோம். கூட்டத்தை கட்டுப்படுத்துவது, மின்தடை ஏற்படாமல் பார்த்து கொள்வது உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்த உள்ளோம். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளுக்கு நிறைய பேர் வருவார்கள் என்பதால் ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் தற்காலிக ஊழியர்கள் பணியில் சேர்க்கப்பட்டுஉள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்தி உள்ளோம்.

போலீசாருக்கு அறிவுறுத்தல்

தற்காலிக ஊழியர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்றால் அவர்கள் மீது தனி கவனம் செலுத்தப்படும். மேலும் ஓட்டல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். ஓட்டல்களுக்கு வரும் பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் ஓட்டல் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். நகரில் உள்ள அனைத்து ஓட்டல்களும் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சில ஓட்டல்கள் விதிமுறைகளை மீறி இருப்பது தெரியவந்து உள்ளது.

கேளிக்கை விடுதிகளில் பணியாற்றும் பெண்களை வேறு செயல்களுக்கு பயன்படுத்துவதாக புகார்கள் வந்து உள்ளது. இதுதொடர்பாக மேற்கு மண்டலத்தில் 27 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். மங்களூரு, கோவை குண்டுவெடிப்பு சம்பவங்கள் எதிரொலியாக பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உஷாராக இருக்க போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story