போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி மீது போலீசார் தாக்குதல்
கொள்ளேகாலில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். தற்போது அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொள்ளேகால்
விவசாயிகள்
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா ஜாகரியஜோதகட்டேதொட்டி கிராமத்தில் வசித்து வரும் 3 விவசாயிகளிடம் இருந்து 13 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அந்த நிலம் பின்னர் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர், அந்த நிலத்தை பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருந்தனர்.
இதுபற்றி அறிந்த விவசாயிகள் மீண்டும் அந்த நிலத்தை சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே வழங்கிட வேண்டும் என்று கூறினர். மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மலை மாதேஸ்வரா டவுனில் உள்ள வனத்துறை அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
போராட்டம்
இந்த நிலையில் நேற்று முன்தினம் மலை மாதேஸ்வரா போலீசார், அங்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தியதாக தெரிகிறது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த ஒரு விவசாயியை போலீசார் கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில் அந்த விவசாயி பலத்த காயம் அடைந்தார். தற்போது அந்த விவசாயி கொள்ளேகாலில் உள்ள தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பதற்றம்
இந்த நிலையில் நேற்று விவசாயிகள் சங்கத்தினர் இதுபற்றி மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அவர்கள் இதுபற்றி மலை மாதேஸ்வரா போலீசில் புகார் அளிக்குமாறு கூறினர். அதன்பேரில் இதுபற்றி அவர்கள், மலை மாதேஸ்வரா போலீசில் புகார் செய்தனர். அதையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
போலீசார் தாக்கியதில் காயம் அடைந்த விவசாயியின் உடல்நிலை மோசமடைந்து உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.