ஒய்சாலா வாகனத்தில் ரோந்து சென்ற போலீஸ் கமிஷனர் தயானந்த்
பெங்களூருவில் ஒய்சாலா வாகனத்தில் போலீஸ் கமிஷனர் தயானந்த் ரோந்து சென்றார். 112-க்கு வரும் புகார்களின் பேரில் போலீசார் செயல்படுகிறார்களா? எனவும் அவர் ஆய்வு நடத்தினார்.
பெங்களூரு:-
ஒய்சாலா வாகனத்தில் ரோந்து
பெங்களூரு மாநகர புதிய போலீஸ் கமிஷனராக தயானந்த் பதவி ஏற்றுள்ளார். அவர், பதவி ஏற்ற பின்பு ரவுடிகளின் அட்டூழியத்தை ஒடுக்க நகர் முழுவதும் 1,344 ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தார். இந்த நிலையில், பொதுமக்கள் ஏதேனும் தங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் 112-க்கு தொடர்பு கொள்ளும்படி பெங்களூரு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இதையடுத்து, 112-க்கு வரும் புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மக்களை தொடர்பு கொண்டு, அவர்களின் பிரச்சினைகளுக்கு போலீசார் தீர்வு காண்கிறார்களா?, மக்களுடன் நட்புறவுடன் போலீசார் செயல்படுகிறார்களா? என்பதை கண்காணிக்க போலீஸ் கமிஷனர் தயானந்த் முடிவு செய்தார். இதையடுத்து, மற்ற போலீசார் ரோந்து செல்ல வழங்கப்படும் ஒய்சாலா வாகனத்திலேயே போலீஸ் கமிஷனர் தயானந்த் ரோந்து சென்றார்.
போலீஸ் கமிஷனர் ஆய்வு
பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளுக்கு ஒய்சாலா வாகனத்தில் அவர் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது 112-க்கு வரும் புகார்களின் அடிப்படையில் சரியான நேரத்திற்குள், ரோந்து போலீசார் சம்பந்தப்பட்ட நபர்களின் வீட்டுக்கு சென்று பிரச்சினைகள் குறித்து விசாரிக்கிறார்களா? என்பது குறித்து போலீஸ் கமிஷனர் தயானந்த் ஆய்வு நடத்தினார். ஏனெனில் 112-ஐ அழைத்து பொதுமக்கள் புகார் கூறினால், அடுத்த 8 நிமிடத்தில் சம்பந்தப்பட்ட பகுதிக்கு ரோந்து போலீசார் செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் புகார் வந்ததும் ரோந்து போலீசார் சரியான நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு செல்கிறார்களா? என்பது குறித்து அவர் ஆய்வு நடத்தி தெரிந்து கொண்டார். மேலும் ரோந்து போலீசார் சரியாக செயல்படுகிறார்களா? என்பதை கண்காணிக்க அடிக்கடி ஒய்சாலா வாகனத்தில் ரோந்து வருவேன் என்றும், ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார், பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் சென்று உதவ வேண்டும் என்றும் போலீஸ் கமிஷனர் தயானந்த் உத்தரவிட்டுள்ளார்.