உத்தரவாத திட்டங்களால் ஏழை-எளிய மக்கள் பயன்பெறுவார்கள்- மந்திரி எச்.சி.மகாதேவப்பா பேச்சு


உத்தரவாத திட்டங்களால் ஏழை-எளிய மக்கள் பயன்பெறுவார்கள்- மந்திரி எச்.சி.மகாதேவப்பா பேச்சு
x

உத்தரவாத திட்டங்களால் ஏழை-எளிய மக்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்துள்ளனர் என்று மந்திரி எச்.சி.மகாதேவப்பா தெரிவித்துள்ளார்.

மைசூரு:-

கிரகஜோதி திட்டம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம், 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் உள்ளிட்ட 5 உத்தரவாதங்களை வாக்குறுதியாக அளித்திருந்தது. தற்போது காங்கிரஸ் கட்சி தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி, தேர்தலுக்கு முன்பு அறிவித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது.

ஏற்கனவே அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குடும்ப தலைவிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்துக்கு விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் கிரகஜோதி திட்டம் நேற்று தொடங்கியது. கலபுரகியில் நடந்த விழாவில், முதல்-மந்திரி சித்தராமையா, இந்த திட்டத்தை ெதாடங்கி வைத்தார்.

பொருளாதார வளர்ச்சி

இதேபோல், மைசூருவில் நடந்த விழாவில் மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி.மகாதேவப்பா கலந்துகொண்டு, பூஜ்ஜிய மின்சார கட்டண பில்லை வழங்கி கிரகஜோதி திட்டத்தை ெதாடங்கி வைத்தார். பின்னர் அவா் பேசியதாவது:-

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 3 மாதங்கள் நிறைவடைந்து விட்டது. நாங்கள் அறிவித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். சித்தராமையா முதல்-மந்திரியாக பதவி ஏற்றதும் 5 உத்தரவாத திட்டங்களுக்கும் கையெழுத்து போட்டார். தற்போது கிரகஜோதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும். காங்கிரஸ் அரசு அறிவித்த உத்தரவாத திட்டங்களால் ஏழை-எளிய மக்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களால் மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் வரை சேமிக்க முடியும்.

இந்த திட்டங்களால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.57 ஆயிரம் கோடி செலவாகிறது. ஆனால் அதை பற்றி கவலைப்படாமல் அரசு, மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் எச்.விஸ்வநாத் எம்.எல்.சி., கலெக்டர் ராஜேந்திரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story