ஜனாதிபதி தேர்தல்: புதுச்சேரியில் ஆதரவு திரட்டினார் திரவுபதி முர்மு


ஜனாதிபதி தேர்தல்: புதுச்சேரியில் ஆதரவு திரட்டினார் திரவுபதி முர்மு
x
தினத்தந்தி 2 July 2022 7:21 AM GMT (Updated: 2 July 2022 7:58 AM GMT)

பாரதீய ஜனதா கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று புதுச்சேரி வந்து ஆதரவு திரட்டினார்.

புதுச்சேரி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நிறைவடைவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வருகிற 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணியின் வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இருவரும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.

புதுச்சேரி வருகை

புதுவையில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் பா.ஜ.க.- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்தநிலையில் கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு திரட்ட ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று காலை புதுச்சேரிக்கு வருகை தந்தார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வருகை தந்த அவர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ஆக்கார்டு ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு கூட்டணி கட்சி தலைவரான முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் அமைச்சர்கள், கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு திரட்டினார்.

இதனைத்தொடர்ந்து கூட்டம் முடிந்ததும் புதுவையில் இருந்து புறப்பட்டு சென்னை செல்ல உள்ளார்.


Next Story