மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்- டி.கே.சிவக்குமார்
மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்க மத்திய அரசுக்கு பா.ஜனதா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக் குமார் வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு:-
கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கடும் நடவடிக்கை
கர்நாடகம் தனது மாநிலத்தில் அணை கட்டுவதை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்று தமிழகத்தை பார்த்து சுப்ரீம் கோா்ட்டு கேள்வி கேட்டுள்ளது. அதனால் பா.ஜனதாவினர் அரசியல் செய்வதை விட்டுவிட்டு மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதியை பெற முயற்சி செய்ய வேண்டும். அவர்களுக்கு கர்நாடகத்தின் நலன் காக்கும் எண்ணம் இருந்தால், காவிரி, மகதாயி, கிருஷ்ணா விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
சிவமொக்கா விவகாரத்தில் சட்டத்தை கையில் எடுக்கும் யாரையும் நாங்கள் சும்மா விட மாட்டோம். இந்த சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். சமுதாயத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பது அரசின் கடமை. அதை நாங்கள் திறம்பட செய்கிறோம். கல்வீச்சு சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கர்நாடகம் அமைதி பூங்கா
யாரும் மக்களை தூண்டிவிடும் வேலையை செய்யக்கூடாது. கல்வீச்சு சம்பவங்களை சகித்துக்கொள்ள மாட்டோம். கர்நாடகம் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும்.
சட்டம் அனைவருக்கும் ஒன்றே. லிங்காயத் அதிகாரிகள் புறக்கணிக்கப்படுவதாக சாமனூர் சிவசங்கரப்பா கூறியுள்ளார். அவருடன் நாங்கள் பேசுவோம். யாரோ புகார் கொடுத்துள்ளதால் அதன் அடிப்படையில் அவா் பேசியுள்ளார்.
இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார்.