உணவுத்துறை அதிகாரி போல் நடித்து ஓட்டல், பேக்கரிகளில் சோதனை நடத்தி பணம் பறித்த அரசு ஊழியர்


உணவுத்துறை அதிகாரி போல் நடித்து ஓட்டல், பேக்கரிகளில் சோதனை நடத்தி பணம் பறித்த அரசு ஊழியர்
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்காவில் உணவுத்துறை அதிகாரி போல் நடித்து ஓட்டல், பேக்கரிகளில் சோதனை நடத்தி பணம் பறித்த அரசு ஊழியரை போலீஸ் தேடுகிறது.

சிவமொக்கா;


சிவமொக்கா டவுன் வினோபா நகர் பகுதியில் உள்ள நெய் தோசை ஓட்டல் முன்பு உணவுத்துறைக்கு சொந்தமான ஜீப் ஒன்று வந்து நின்றது. அந்த ஜீப்பில் இருந்து கீழே இறங்கிய நபர், அந்த ஓட்டலுக்குள் சென்று தன்னை உணவுத்துறை அதிகாரி என்று கூறியுள்ளார். பின்னர் அவர், ஓட்டலில் உணவின் தரம், சுகாதாரம் குறித்து சோதனை நடத்தியுள்ளார்.

இதையடுத்து குறைகள் கூறி ஓட்டல் நிர்வாகத்திற்கு அபராதம் விதித்து பணம் வசூலித்துள்ளார். இதேபோல் அப்பகுதியில் உள்ள மற்ற ஓட்டல்கள், பேக்கரிகளுக்கும் சென்று சோதனை நடத்தி அபராதம் விதித்து பணம் வசூலித்துள்ளார். இதற்கிடையே அந்த நபர் மீது சந்தேகமடைந்த கடை உரிமையாளர்கள், சில பத்திரிகையாளர்கள் உதவியுடன் அவரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில் அந்த நபர், உணவுத்துறை அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வரும் கங்காதர் என்பதும், உணவுத்துறைக்கு சொந்தமான ஜீப்பில் வந்து அதிகாரி போல் நடித்து ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட கடைகளில் சோதனை நடத்தி பணம் பறித்ததும் தெரியவந்தது. இந்த செயலில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதுபற்றிய தகவலின் பேரில் வினோபா நகர் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கங்காதர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து ஜீப்பை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரை தேடிவருகின்றனர்.


Next Story