கலவரம், குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுத்து சிவமொக்காவை அமைதியான மாவட்டமாக மாற்றுவேன்; போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் சூளுரை
கலவரம், குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுத்து சிவமொக்காவை அமைதியான மாவட்டமாக மாற்றுவேன் என்று போலீஸ் சூப்பிரண்டு மிதுன்குமார் தெரிவித்துள்ளார்.
சிவமொக்கா;
கஞ்சா விற்பனை
சிவமொக்கா மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுள்ள மிதுன் குமார் நேற்றுமுன்தினம் சிவமொக்காவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிவமொக்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்றுக்கொண்ட பின்பு மாவட்ட சிறப்பு போலீஸ் படை அரங்கில் நிருபர்களை சந்தித்து பேசுவது பெருமையாக உள்ளது. தற்போது மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் கட்டுக்குள் இருந்தாலும், இன்னும் முழுமையாக கஞ்சா விற்பனை ஒழிக்கப்படவில்லை. இதனை ஒழிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்.
மேலும் நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் இருக்கும் நபர்கள், குழுக்களாக இருந்து நகரின் அமைதியை சீர்குலைத்து வருகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமான செயல்களை தடுக்க அனைத்து அதிகாரிகள் ஒத்துழைப்புடன் முழு கவனம் செலுத்துவேன்.
அமைதியான மாவட்டமாக...
கலை மற்றும் கலாசார மிக்க சிவமொக்கா மாவட்டம் அரசியல் செயல்பாட்டிற்கு முக்கியமான நகரமாக விளங்குகிறது. கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. வருங்காலங்களில் எந்த கலவரமும், குற்றச்சம்பவங்களும் நடக்காமல் தடுத்து சிவமொக்காவை அமைதியான மாவட்டமான மாற்றுவேன். அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பேன்.
மேலும் சிவமொக்கா மாவட்டத்தை கஞ்சா மற்றும் ரவுடிகள் இல்லாத நகரமாக மாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.இந்த பேட்டியின்போது அவருடன் மாவட்ட துைண போலீஸ் சூப்பிரண்டு விக்ரம்ஆம்டே மற்றும் பல அதிகாரிகள் உடன் இருந்தனர்.