மேற்கு வங்கத்தில் ஆற்றில் துர்கா சிலைகள் கரைக்கப்படும் போது திடீர் வெள்ளம்: 7 பேர் பலி
துர்கா விசர்ஜனத்தின் போது ஜல்பைகுரியில் மால் ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்தனர், பலர் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கொல்கத்தா,
வடமாநிலங்களில் நவராத்திரி விழாவையொட்டி துர்கா பூஜை பிரபலமாக நடைபெறும். இறுதியில் விநாயகர் சிலை கரைக்கப்படுவதுபோல துர்கா சிலைகளையும் கரைத்துவிடுவார்கள். இந்தநிலையில் மேற்கு வங்கத்தில் ஜல்பைகுரியில் மால் ஆற்றில் நேற்று துர்காபூஜை முடித்து சிலை கரைப்பு நிகழ்வு நடந்தது. திடீரென ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு பலர் அடித்து செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. அடித்து செல்லப்பட்டவர்களை மீட்க மீட்பு படை களம் இறக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் துர்கா பூஜை விழாவின் போது நடந்த அசம்பாவிதத்தால் வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.