டெல்லி மருத்துவமனைகளில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்! மருத்துவர்கள் எச்சரிக்கை
வட இந்தியாவில் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளை கொண்ட நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
வட இந்தியாவில் காய்ச்சல், தொண்டையில் கரகரப்பு, இருமல் மற்றும் மூக்கு ஒழுகுதல் உள்ளிட்ட மேல் சுவாசக் குழாய் தொடர்பான அறிகுறிகளைக் கொண்ட ஏராளமான நோயாளிகள் எண்ணிக்கை சமீப நாட்களில் அதிகரித்துள்ளது.
டெல்லியில், ஆகஸ்ட் 1ம் தேதி 3.23 சதவீதமாக இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் விகிதம், ஆகஸ்ட் 17ல் 6.23 சதவீதமாக இரு மடங்காக அதிகரித்துள்ளது.
டெல்லியில் கொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகபட்சமாக 19.20 சதவீதமாக உள்ளது. ஆகஸ்ட் 17 ஆம் தேதி நிலவரப்படி அங்கு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 6,809 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு பிஏ.2.75 ஒமைக்ரான் வகை மாறுபாடு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆகவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை மக்கள் செலுத்திக்கொள்ள அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.