மணிப்பூர்: 2 பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் - சிபிஐ வழக்குப்பதிவு


மணிப்பூர்: 2 பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் - சிபிஐ வழக்குப்பதிவு
x

Image Courtesy: PTI

மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

டெல்லி,

மணிப்பூரில் மெய்தி, குக்கி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இந்த வன்முறையில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மணிப்பூர் வன்முறையில் இரு சமூகத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அரங்கேறியுள்ளன.

அந்த வகையில் கடந்த மே 4ம் தேதி கங்பொக்பி மாவட்டத்தில் ஆண்கள் கும்பலால் குகி சமூகத்தை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். பின்னர் அந்த பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

கும்பல் 2 பெண்களை நிர்வாணமாக அழைத்து செல்வது தொடர்பான வீடியோ கடந்த 19ம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முக்கிய குற்றவாளி உள்பட 7 பேரை இதுவரை கைது செய்துள்ளனர். வீடியோ எடுக்கப்பட்ட செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ விவகாரத்தை சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்நிலையில், 2 பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக சிபிஐ இன்று வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டுள்ள 7 பேரையும் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது.

மேலும், குற்றச்சம்பவம் நடைபெற்ற இடத்தை நேரில் பார்வையிடும் சிபிஐ அதிகாரிகள், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பாதிக்கப்பட்ட பெண்களிடமும் வாக்குமூலம் பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story