மைசூருவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகள்; பிரதாப் சிம்ஹா எம்.பி. தகவல்


மைசூருவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகள்; பிரதாப் சிம்ஹா எம்.பி. தகவல்
x

மைசூருவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்த தகவலை பிரதாப் சிம்ஹா எம்.பி. தெரிவித்துள்ளார்.

மைசூரு;

பிரதமர் மோடி வருகை

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வருகிற 21-ந்தேதி மைசூரு அரண்மனையில் நடக்கும் யோகா தினவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டியும், யோகா தினவிழாவுக்கான முன்னேற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த யோகா தினவிழாவில் 15 ஆயிரம் பேர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிலையில் மைசூருவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்த தகவலை பிரதாப் சிம்ஹா எம்.பி. நிருபர்களிடம் தெரிவித்துள்ளதாவது:-

சாமுண்டீஸ்வரி கோவிலில்...

பிரதமர் மோடி, கர்நாடகத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகிற 20-ந்தேதி வருகிறார். இதையடுத்து அவர், பெங்களூருவில் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவிட்டு மறுநாள்(21-ந்தேதி) மைசூரு அரண்மனையில் நடக்கும் சர்வதேச யோகா தினவிழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக 20-ந்தேதி மாலை தனிவிமானம் மூலம் மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்திற்கு வந்திறங்குகிறார். அவரை, கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் வரவேற்பார்கள்.

பின்னர் பிரதமர் மோடி சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதை முடித்துக்கொண்டு சுத்தூர் மடத்திற்கு சென்று மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திரா சுவாமியை சந்தித்து ஆசி பெறுகிறார்.

இதையடுத்து மைசூரு அரண்மனைக்கு சென்று மகாராணி பிரமோதா தேவி உடையார், இளவரசர் யதுவீரை சந்தித்து பேசுகிறார். மறுநாள்(21-ந்தேதி) காலை 6.30 மணியளவில் மைசூரு அரண்மனையில் நடக்கும் யோகா தினவிழாவில் கலந்து கொள்கிறார்.

பின்னர் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துகொண்டு தனி விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு செல்கிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி மைசூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story