பெங்களூருவில் நடப்பு ஆண்டில் ரூ.2,718 கோடி சொத்து வரி வசூல்; மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தகவல்
பெங்களூருவில் நடப்பு ஆண்டில் இதுவரை ரூ.2,718 கோடி சொத்து வரி வசூலாகி இருப்பதாக மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறியுள்ளார்.
பெங்களூரு:
சொத்துவரி வசூல்
பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத், சொத்து வரி வசூல் குறித்து அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் துஷார் கிரிநாத் பேசியதாவது:-
வருவாய்த்துறை அதிகாரிகள் சொத்து வரியை வசூலிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சொத்துவரி பாக்கி வைத்துள்ளவர்களுக்கு நோட்டீசு அனுப்பி அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள், கிளப்புகள், வணிக வளாகங்களிடம் இருந்து சொத்துவரி வசூலிக்க வேண்டும். கோர்ட்டுகளில் வழக்குகள் இருந்தால் அவற்றை விரைவாக முடிவுக்கு கொண்டு வந்து வரி வசூலிக்க வேண்டும்.
அபராதம்-வட்டி
மின் இணைப்புகள் அடிப்படையில் நாங்கள் சொத்துகளை கணக்கிட்டு வருகிறோம். அதில் யாராவது சொத்து வரியை கட்டாமல் இருப்பது தெரியவந்தால் அந்த சொத்துகளுக்கு அபராதம், வட்டியை விதித்து சொத்துவரி வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சொத்துவரி வளையத்திற்கு வெளியே இருக்கும் சொத்துகளை அந்த வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும்.
நடப்பு ஆண்டில் ரூ.4 ஆயிரத்து 189 கோடி சொத்துவரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் இதுவரை ரூ.2 ஆயிரத்து 718 கோடி வரி வசூலாகியுள்ளது. அதாவது மொத்த வரி வசூல் இலக்கில் 64.88 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. இலக்கை அடைய இன்னும் ரூ.1,471 கோடி வசூலிக்க வேண்டும். இந்த வரியை வசூலிக்க வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு துஷார் கிரிநாத் பேசினார்.