பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்; 9 பேர் கைது - 26 இளம்பெண்கள் மீட்பு
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடத்திய 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட டெல்லி, மும்பையை சேர்ந்த 26 இளம்பெண்களை போலீசார் மீட்டுள்ளனர்.
ஞானபாரதி:
அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வேலை வாங்கி தருவதாக கூறி டெல்லி, மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த பெண்களை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தும் சம்பவம் நடந்து வருகிறது. இதுகுறித்து அவ்வப்போது போலீசார் சோதனை நடத்தி பாலியல் தொழில் நடத்தி வருபவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து இளம்பெண்களை மீட்டு வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூரு ஞானபாரதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வெளிமாநில இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது. இதையடுத்து அங்கிருந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
26 இளம்பெண்கள் மீட்பு
அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடத்தியதாக சுமந்த், குனாவர், நவாஸ் ஷரீப் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பெங்களூருவில் வேலை வாங்கி தருவதாக டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இளம்பெண்களை அழைத்து வந்து, அவர்களை மிரட்டி கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து போலீசார் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 26 இளம்பெண்களை போலீசார் மீட்டனர். அவர்கள் அனைவரும் டெல்லி, கொல்கத்தா, மும்பையை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதையடுத்து அவர்கள் அனைவரும் மகளிர் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.