திருவனந்தபுரம்: மருத்துவ சேர்க்கைக்கு அதிகளவு பணம் பெறப்பட்டதாக புகார்; பேராயருக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியது!


திருவனந்தபுரம்: மருத்துவ சேர்க்கைக்கு அதிகளவு பணம் பெறப்பட்டதாக புகார்; பேராயருக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியது!
x

திருவனந்தபுரத்தில் தென் கேரளா டயோசிஸ் பேராயர் தர்மராஜ ரசலத்திற்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அங்குள்ள தென் கேரளா டயோசிஸ் பேராயர் தர்மராஜ ரசலத்திற்கு எதிராக ஏராளமான கிறிஸ்தவ மதத்தினர் மற்றும் ஆயர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது.

மாணவர் சேர்க்கையில் அதிக அளவு பணம் பெறப்பட்டதாக எழுந்துள்ள புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள், கேரள பேராயர் தர்மராஜ ரசலத்திடம் விசாரணை நடத்தினர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் டாக்டர் சோமர்வெல் மெமோரியல் சிஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்நிலையில் இந்த மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையின்போது அதிக அளவில் பணம் பெறப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கல்லூரியின் நிர்வாகியாக செயல்பட்டு வரும் பேராயர் ஏ.தர்மராஜ ரசலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து பிரிட்டன் செல்ல முயன்றபோது அவர் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் அவருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சார்பில் சம்மன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பேராயர் மற்றும் சில முக்கிய அதிகாரிகள் அமலாக்க துறையின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் மாணவர்களிடமிருந்து மருத்துவ படிப்புக்காக டொனேஷன் எனப்படும் நிதி உதவியை முன் பணம் ஆக வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பேராயருக்கு எதிராக போராட்டம் இன்று நடைபெற்றது. நூற்றுக்கணக்கானவர்கள் இதில் பங்கேற்றனர். திருவனந்தபுரத்தில் உள்ள பேராயர் இல்லம் வரை நடந்து சென்று முற்றுகையிட்டனர். அவர் ஆயர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.

போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் கலைந்து செல்லுமாறு போலீசார் கூறியும் அவர்கள் கேட்காததால், லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. சிலரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

முன்னதாக கடந்த திங்கட்கிழமை, தென் கேரளா டயோசிஸ் பேரவைக்கு சொந்தமான பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் ஆயர் இல்லம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது. டாக்டர் சோமர்வில் நினைவு சிஎஸ்ஐ மருத்துவ கல்லூரியின் இயக்குனர் ஆபிரகாமுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது.


Next Story