ஹிஜாப் அணிய அனுமதிக்கக்கோரி வகுப்பறைக்குள் போராட்டம்; 24 முஸ்லிம் மாணவிகள் இடைநீக்கம்


ஹிஜாப் அணிய அனுமதிக்கக்கோரி வகுப்பறைக்குள் போராட்டம்;  24 முஸ்லிம் மாணவிகள் இடைநீக்கம்
x

ஹிஜாப் அணிய அனுமதிக்கக்கோரி வகுப்பறைக்குள் போராட்டம் நடத்திய 24 முஸ்லிம் மாணவிகளை இடைநீக்கம் செய்து அரசு ஜூனியர் கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மங்களூரு;


ஹிஜாப் விவகாரம்

கர்நாடக மாநிலம் உடுப்பியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த முஸ்லிம் மாணவிகளை கண்டித்து இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தனர். இந்த விவகாரம் கர்நாடகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்தது. மேலும் வன்முறையும் ஏற்பட்டது. இதனால் மாநிலத்தில் ஒரு வாரத்திற்கு மேல் பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மத அடையாள ஆடை அணிந்து வர கர்நாடக அரசு தடை விதித்தது.

இதனை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஐகோர்ட்டு, பள்ளி, கல்லூரிகளில் மத அடையாள ஆடைகள் அணிய தடை விதித்த மாநில அரசின் உத்தரவு செல்லும் என உத்தரவிட்டது.

போராட்டம்

இதையடுத்து தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதால் இந்த விவகாரம் ெபரிய அளவில் பேசப்படவில்லை. இந்த நிலையில் தற்போது ஹிஜாப் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் கடந்த மாதம் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கண்டித்து ஏ.பி.வி.பி. மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.

இதேபோல், புத்தூர் தாலுகா உப்பினங்கடியில் உள்ள அரசு ஜூனியர் கல்லூரியிலும் ஹிஜாப் அணிந்து வர முஸ்லிம் மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் கல்லூரி உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்து வந்த 7 மாணவிகளை கடந்த வாரம் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்திருந்தது.

இந்த நிலையில் அதே கல்லூரியில் படிக்கும் 23 முஸ்லிம் மாணவிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு 'ஹிஜாப், எங்கள் உரிமை என்றும், எங்களை ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என்றும்' வகுப்பறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

24 மாணவிகள் இடைநீக்கம்

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் கல்லூரி வளர்ச்சி குழுவின் கூட்டம் நடந்தது. இதில் வளர்ச்சி குழுவின் தலைவரும், புத்தூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வுமான சஞ்சீவ மாதண்டூர், கல்லூரி முதல்வர் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், ஹிஜாப் அணிய அனுமதி வழங்க கோரி வகுப்பறைக்குள் போராட்டம் நடத்திய முஸ்லிம் மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, போராட்டம் நடத்திய 24 முஸ்லிம் மாணவிகளையும் இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், கர்நாடக அரசு மற்றும் ஐகோர்ட்டு உத்தரவுபடி பள்ளி, கல்லூரிகளில் மத அடையாள ஆடைகளுக்கு அனுமதி இல்லை என்றும், அதன்படி மாணவ-மாணவிகள் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.


Next Story