பி.யூ. கல்லூரி மாணவி தற்கொலை


பி.யூ. கல்லூரி மாணவி தற்கொலை
x

உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்ததால், பி.யூ. கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பா.ஜனதா பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிக்கமகளூரு:-

திருமணத்துக்கு மறுப்பு

சிக்கமகளூரு மாவட்டம் கலசா தாலுகா சம்சே கிராமத்தில் 17 வயது பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பி.யூ. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் நித்தீஸ் (25). பா.ஜனதா பிரமுகர். இந்த நிலையில் 17 வயது பெண்ணுக்கும், நித்தீசுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் தனியாக சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நித்தீசிடம் கூறி உள்ளார். அதற்கு பெண்ணின் வயதை காரணம் காட்டி தற்போது திருமணம் செய்ய முடியாது என நித்தீஸ் கூறி உள்ளார்.

பரிதாப சாவு

மேலும், மாணவியிடம் இருந்து நித்தீஸ் விலக தொடங்கினார். நித்தீசுக்கு, போன் செய்தாலும், அவர் அதை எடுக்காமல் தவிர்த்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் காதலன் தன்னிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு, தற்போது திருமணத்துக்கு மறுப்பதை நினைத்து, வேதனை அடைந்த பெண், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்தார்.

இதுகுறித்து அறிந்த அவரது பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குதிரேமுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

கடிதம் சிக்கியது

மேலும், மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதற்கிடையே மாணவி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீசிடம் சிக்கியது. அதில், தனக்கும், அந்த பகுதியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகரான நித்தீஸ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக கூறப்பட்டு இருந்தது.

அதில் அவர் உல்லாசம் அனுபவித்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதால், தற்கொலை செய்து கொள்வதாக கூறப்பட்டு இருந்தது. மகள் சாவுக்கு காரணமான நித்தீஸ் மீது பெண்ணின் பெற்றோர் குதிரேமுகா போலீசில் புகார் அளித்தனர். முதலில் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ய மறுத்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் நித்தீஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், நித்தீசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story