மக்கள்நல பணியாளர் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
மக்கள்நல பணியாளர் விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
புதுடெல்லி,
மக்கள்நல பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு விசாரித்தது.
விழுப்புரம் மாவட்ட மக்கள்நல பணியாளர்கள் மறுவாழ்வு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.தனராஜ் சார்பில் வக்கீல் ஹரிபிரியா பத்மநாபன் ஆஜராகி வாதிட்டார்.
அவர், மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் ரூ.7,500 மாத ஊதியத்துடன் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களாக பணியமர்த்தும் தமிழ்நாடு அரசின் திட்டத்தில் 100 நாள்களுக்கு மட்டுமே பணியாற்ற முடியும். மீதமுள்ள நாள்களில் என்ன செய்ய முடியும்? மாதம் ரூ.7,500-ஐ குறைந்தபட்ச ஊதியமாக கருத முடியாது.
இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் தீர்ப்பை உறுதிசெய்ய வேண்டும். தமிழக அரசின் திட்டத்தில் பணிக்கு சேராமல் உள்ள 489 பேருக்கும், ஐகோர்ட்டு உத்தரவுப்படி அளிக்கப்பட்ட 5 மாத ஊதியத்தை திருப்பி அளித்தவர்களுக்கும் வட்டியுடன்கூடிய அசல் தொகையை வழங்க வேண்டும் என வாதிட்டார்.
மக்கள்நல பணியாளர்களில் மற்றொரு பிரிவினர் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள்நல பணியாளர்கள் வேலையில்லாமல் தவித்துவந்தனர். தற்போதுள்ள அரசு, மக்கள்நல பணியாளர்களுக்கு மீண்டும் பணி அளிக்க முன்வந்துள்ளது என வாதிட்டார்.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தா, மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் மத்திய அரசுடையது. இத்திட்டம் தொடரும்வரை, ஒருங்கிணைப்பாளர்களாக உள்ள மக்கள்நல பணியாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என்ற உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்கலாம் என்ற யோசனையை தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.