லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை சாவு
இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடக்க இருந்த நிலையில் லாரி-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தார். திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு திரும்பி வந்தபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
சிக்கமகளூரு:-
லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்
சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாலுகா நேரலகுண்டே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத்் (வயது 30). இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த இளம்பெண்
ஒருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்களின் திருமணம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருந்தது. இந்த நிலையில் காட்டனஹட்டி கிராமத்தில் உறவினர் ஒருவருக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க மறந்ததால், அவருக்கு அழைப்பிதழ் கொடுக்க நேற்று முன்தினம் காலை மஞ்சுநாத் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு திரும்பி மோட்டார் சைக்கிளில் நேரலகுண்டே நோக்கி வந்து கொண்டிருந்தார்.
சாவு
அப்போது அவர் காட்டனஹட்டி கிராமத்தின் அருகே சென்றபோது எதிரே வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மஞ்சுநாத் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் செல்லகெரே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு மஞ்சுநாத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சோகம்
அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில், விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து செல்லகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.