டெல்லியில் குவாட் கூட்டமைப்பு வெளியுறவு மந்திரிகள் கூட்டம் - சீனா மீண்டும் எதிர்ப்பு


டெல்லியில் குவாட் கூட்டமைப்பு வெளியுறவு மந்திரிகள் கூட்டம் - சீனா மீண்டும் எதிர்ப்பு
x

குவாட் கூட்டத்தின் போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் வெளியுறவு மந்திரிகள் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

புதுடெல்லி,

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாட் அமைப்புக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜி20 வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டத்தை தொடர்ந்து, குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் நடைபெற்றது.

இந்தோ-பசிபிக் கடற் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து, பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்காக குவாட் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குவாட் அமைப்புக்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற குவாட் கூட்டத்தின் போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் வெளியுறவு மந்திரிகள் கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில் இந்தோ - பசிபிக் கடல் பிராந்தியத்தில் ஆக்கிரமிப்பு செயல்களை தடுப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் ஆட்சி, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது தொடர்பான கொள்கைகளை தீவிரமாக ஆதரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குவாட் அமைப்புக்கு சீனா மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டுக்குமான ஒத்துழைப்பு என்பது அமைதி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், பரஸ்பர நம்பிக்கை மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்று சீனா கூறியுள்ளது.


Next Story