ராகுல் காந்தியை "பப்பு" என கூறுவதா... பிரதமர் மோடியை சாடிய பிரியங்கா காந்தி
ராஜ்காட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பிரியாங்கா காந்தி உரையாற்றினார்.
ராஜ்கோட்,
காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், எம்.பி.பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ததை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
புது டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பிரியாங்கா காந்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;
ராகுல் காந்தி ஏழை மக்களின் உணர்வுகளையும், பிரச்சனைகளையும் புரிந்து பேசி வருகிறார். இதனால் அவரை பார்த்து பாஜகவினர் பயப்படுகின்றனர். மேலும் நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க முடியாத வகையில் ராகுல் காந்தி கேள்விகள் கேட்டார். என் சகோதரரை பார்த்து பயந்தவர்கள் தான் அவரை நாடாளுமன்றத்துக்குள் வரவிடாமல் செய்வதற்காகவே தகுதி நீக்கம் செய்துள்ளனர்
என் அண்ணணை பப்பு என கூறுவதா, அவர் ஹார்வர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்புகளை படித்து முடித்துள்ளார். இந்த பல்கலைக்கழங்கள் உலகில் தலைசிறந்தவையாக உள்ளன. ஆனாலும் எனது அண்ணனை‛பப்பு' என அழைக்கிறார்கள்.
பாரத் ஜோடோ யாத்திரையில் அவருடன் பல லட்சம் மக்கள் நடந்து வந்ததை பார்த்து அவர் பப்பு இல்லை என்பதை பாஜகவினர் உணர்ந்துள்ளனர்.
எனது குடும்பத்தின் ரத்தம் இந்த நாட்டில் ஜனநாயகத்தை உழுது விட்டது, இந்த நாட்டின் ஜனநாயகத்திற்காக எதையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம், இந்த நாட்டில் ஜனநாயகத்திற்கு அடித்தளமிட்டவர்கள் காங்கிரசின் மாபெரும் தலைவர்கள்.
ராகுல் காந்தியில் பதவியை பறித்த திமிர்பிடித்த அரசுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.