மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம்


மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம்
x
தினத்தந்தி 8 Aug 2023 8:30 AM IST (Updated: 8 Aug 2023 1:50 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் இன்று நடைபெற உள்ளது.

டெல்லி,

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. மணிப்பூர் வன்முறை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வலியுறுத்தி இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும், மணிப்பூர் நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு ஏற்பதாக மக்களவை சபாநாயகர் அறிவித்தார். மேலும், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் 8ம் தேதி (இன்று) தொடங்கும் எனவும் சபாநாயகர் அறிவித்தார்.

இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் இன்று தொடங்குகிறது. மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவாதத்தின்போது மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மத்திய அரசு தரப்பில் உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ ஆகியோரும், 5 எம்.பி.க்களும் விளக்கம் அளிக்க உள்ளனர். 5 எம்.பி.க்களில் பெரும்பாலானோர் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு இவர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.

விவாதத்திற்கு பின் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. மக்களவையில் எம்.பி.க்கள் எண்ணிக்கை 570 ஆகும். தீர்மானத்தை நிறைவேற்ற பெரும்பான்மைக்கு 270 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.

ஆனால், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் 142 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். மத்திய பாஜக அரசுக்கு தற்போது 332 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம், ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும்பட்சத்தில் மத்திய பாஜக அரசின் பலம் 366 எம்.பி.க்கள் ஆதரவாக அதிகரிக்கும். இதன் மூலம் மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பின்போது தோல்வியடைய அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆனாலும், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையுடனேயே மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story