மத்திய அரசை கண்டித்து ரெயில்வே ஊழியர்கள், சங்கத்தினர் போராட்டம்


மத்திய அரசை கண்டித்து ரெயில்வே ஊழியர்கள், சங்கத்தினர் போராட்டம்
x

ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட கோரி மத்திய அரசை கண்டித்து ரெயில்வே ஊழியர்கள் மற்றும் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

மைசூரு

ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட கோரி மத்திய அரசை கண்டித்து ரெயில்வே ஊழியர்கள் மற்றும் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

பொதுத்துறை நிறுவனங்கள்

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றன் பின் ஒன்றாக தனியாருக்கு விற்பனை செய்து வருகிறது. அரசு நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் நிதி நிலையை கருத்தில் கொண்டு தனியார் பங்களிப்பை மத்திய அரசு நாடுகிறது. இதற்காக தற்போது நாட்டின் பெரிய பொதுத்துறை நிறுவனமான ரெயில்வேயை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதனை கண்டித்து மைசூருவில் உள்ள தென்மேற்கு ரெயில்வே அலுவலகம் முன்பு ரெயில்வே ஊழியர்கள் மற்றும் மஜதூர் சங்கத்தினா் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களுள் நட்சத்திர பட்டியலில் உள்ள ரெயில்வே துறையை தனியாரிடம் மத்திய அரசு ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது. ரெயில்வே துறையில் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. எதற்காக அதை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். அதை அரசே நடத்தினால் நல்லது. தனியாரிடம் கொடுத்துவிட்டால் ரெயில்வேயில் வேலை கிடைப்பது அரிதாகிவிடும்.

ஏழை மக்கள் பாதிப்பு

மேலும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ரெயில்வேயில் ேவலை கிடைக்கும். சம இடஒதுக்கீடு இல்லாமல் போய்விடும். தனியார் ரெயில் பயணத்திற்கான விலையை உயர்த்தி விடுவார்கள். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய அரசு ரெயில்வே உள்ளிட்ட அரசு நிறுவனங்களை எந்த காரணம் கொண்டும் தனியாரிடம் கொடுக்க கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story