சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பூசாரிக்கு சரமாறி அடி உதை - போக்சோவில் கைது
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் அருகே 5 வயது சிறுமியை கோவிலுக்குள் வைத்து 60 வயது சாமியார் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் மலாகெடா பகுதியை சேர்ந்தவர் சுன்னா. 60 வயதாகும் இவர் அங்குள்ள கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கோவிலுக்கு அருகே 5 வயது சிறுமி விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.
அந்த சிறுமியை கண்ட பூசாரி சுன்னா, அவரிடம் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். கோவில் உள்ளே நுழைந்தவுடன் சிறுமியிடம் பூசாரி சுன்னா தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த சிறுமி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுன்னா சிறுமியை கொடூரமாக தாக்கி உள்ளார்.
பூசாரியின் தாக்குதல்களால் வலி தாங்க முடியாமல் சிறுமி அலறியுள்ளார். கோவிலுக்குள் இருந்து சத்தம் வருவதை அறிந்த அப்பகுதி மக்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது சிறுமியிடம் பூசாரி சுன்னா பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கொண்டிருந்ததை பொதுமக்கள் கண்டனர். ஆத்திரமடைந்த அவர்கள் சிறுமியை காப்பாற்றியதுடன் சாமியார் சுன்னாவை கோவிலில் வைத்தே சரமாறியாக அடித்து உதைத்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாமியார் சுன்னாவை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.