தகவல் போர், சைபர் குற்றங்கள் போன்ற அச்சுறுத்தல்களை முறியடிக்க சர்வதேச அளவில் நடவடிக்கை தேவை: மந்திரி ராஜ்நாத் சிங்


தகவல் போர், சைபர் குற்றங்கள் போன்ற அச்சுறுத்தல்களை முறியடிக்க சர்வதேச அளவில் நடவடிக்கை தேவை: மந்திரி ராஜ்நாத் சிங்
x

‘சைபர்- குற்றங்கள்’ போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிக்க சர்வதேச சமுதாயம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

புதுடெல்லி,

'சைபர்- குற்றங்கள்' மற்றும் 'சமூக வலைதளங்களின் தகவல் போர்' போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முறியடிக்க சர்வதேச சமுதாயம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

புதுடெல்லியில் தேசிய ராணுவ கல்லூரியின் 60வது பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உரையாற்றினார். இதில், பயிற்சி முடித்த இந்திய முப்படை அதிகாரிகள், ஆட்சிப்பணி அதிகாரிகள் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு பட்டங்களையும் அவர் வழங்கினார்.


பட்டமளிப்பு விழாவில் ராஜ்நாத் சிங் பேசியதாவது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. குறிப்பாக மக்கள் அனைவரின் விருப்பங்களும் பாதுகாக்கப்படும்போது தான், நாடு முழு வல்லமை பெற்றதாக மாறும் என்பதைக் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பாதுப்புக்கு இடையேயான இடைவெளி குறுகி வரும் நிலையில், கால மாற்றத்திற்கு ஏற்ப நாடு எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களும் புதிய வடிவம் பெற்றிருப்பதால், அதனைப் பிரித்து ஆராய்வது சவால் மிகுந்ததாக இருக்கிறது.

பொதுவாக, உள்நாட்டு பாதுகாப்பில் இடம்பிடித்திருந்த பயங்கரவாதம், தற்போது, வெளிநாட்டுப் பாதுகாப்பில் இடம்பெற்றுள்ளது. பயிற்சி அளிப்பது, நிதிதிரட்டுவது, ஆயுதங்களை விநியோகிப்பது போன்றவற்றை, பயங்கரவாத அமைப்புகள் நாட்டுக்கு வெளியே மேற்கொள்கின்றன.

சைபர்-குற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள் மாபெரும் அச்சுறுத்தலாகத் திகழ்வதாகவும், இவற்றால் குறிப்பாக எரிசக்தி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு உள்ளிட்டத் துறைகள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. ரஷியா- உக்ரைன் இடையேயான போர் குறித்த தகவல்களை, சமூக வலைதளங்களும், இதர ஆன்லைன் தகவல் பரிமாற்ற தளங்களும், தங்கள் கண்ணோட்டத்தில் வெளியிட்டு வருகின்றன. இதனை தற்போதைய புதிய தகவல் போர் என கூறலாம்.

ஒரு நாட்டின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும்போது, அது, பலவழிகளில் உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இதற்கு ரஷியா- உக்ரைன் போர் உதாரணமாகத் திகழ்கிறது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று போன்றச் சூழ்நிலைகளை எதிர்கொள்ள, வைரஸ் குறித்த ஆராய்ச்சி, தடுப்பூசி உற்பத்தி தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்ளும் உலக நாடுகளின் ஒட்டுமொத்த அமைப்பு உடனடித் தேவை.மற்ற நாடுகளின் உழைப்பில், வலிமையான மற்றும் வளமான நாடாக இந்தியா உருவாகக்கூடாது என்பதே நமது நிலைப்பாடு. மற்ற நாடுகளுக்கு உதவுவதுடன், அவற்றின் முழு வல்லமையை உணர்ந்து கொண்ட நாடாகத் திகழ வேண்டும் என இந்தியா நம்புகிறது.

உலக நாடுகளை ஆதிக்கம் செலுத்தும் குறிப்பிட்ட சில நாடுகளின் உத்தரவுகளை, இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. அனைத்து நாடுகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, சமமாக நடத்துவது தான் இந்தியாவின் நீதி என்று அவர் கூறினார்.


Next Story