ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், வியட்நாமில் 3 நாள் சுற்றுப்பயணம் 8-ந்தேதி செல்கிறார்
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் அரசுமுறை பயணமாக 8-ந்தேதி வியட்நாம் செல்கிறார்.
புதுடெல்லி,
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் அரசுமுறை பயணமாக 8-ந்தேதி வியட்நாம் செல்கிறார். 10-ந்தேதி வரை அங்கு தங்கியிருக்கும் அவர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதுடன், இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் பணிகளிலும் ஈடுபடுவார் என ராணுவ அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
குறிப்பாக வியட்நாம் அதிபர் நுயன் ஜுவான் பக், பிரதமர் பாம் மின் சின் மற்றும் ராணுவ மந்திரி பான் வாங் ஜியாங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ராஜ்நாத் சிங்கின் இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக, வியட்நாமுக்காக இந்தியாவில் கட்டப்பட்ட 12 அதிவேக ரோந்து படகுகளை அந்த நாட்டு அரசிடம் அவர் ஒப்படைக்கிறார். வியட்நாமுடன் வளர்ந்து வரும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மற்றும் பிரதமர் மோடியின் 'தற்சார்பு இந்தியா' மற்றும் மேக் இன் இந்தியா திட்டங்களுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது.