பக்தர்கள் தரிசனத்துக்கு அயோத்தி ராமர் கோவில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் திறப்பு


பக்தர்கள் தரிசனத்துக்கு அயோத்தி ராமர் கோவில் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் திறப்பு
x
தினத்தந்தி 26 Oct 2022 4:30 AM IST (Updated: 26 Oct 2022 4:30 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தி ராமர் கோவில், 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் பக்தர்கள் தரிசனத்துக்கு திறந்து விடப்படும் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அயோத்தி,

அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.

2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், பிரதமர் மோடி, ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ராமர் கோவில் கட்டுமான பணிகள் 50 சதவீதம் முடிவடைந்து விட்டன. கட்டுமான பணிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றம் திருப்தி அளிக்கிறது.

அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் கோவிலின் தரைத்தளம் தயாராகி விடும். 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி மகர சங்கராந்தி நாளில், கோவில் கர்ப்பகிரகத்தில் ராமர் சிலைகள் நிறுவப்படும்.

அதைத்தொடர்ந்து அதே மாதத்தில், ராமர் கோவில் பக்தர்களுக்கு திறந்து விடப்படும்.

கோவில் கட்டி முடிப்பதற்கு மொத்தம் ரூ.1,800 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கோவிலில், பிரபலமான இந்து மடாதிபதிகள் சிலைகள் வைப்பதற்கு இடம் ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

நேற்று பத்திரிகையாளர்கள் பலர், ராமர் கோவில் கட்டுமான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிரதமர் மோடி கடந்த 23-ந் தேதி பார்வையிட அமைக்கப்பட்ட உயரமான இடத்தில் இருந்து அவர்கள் பார்த்தனர். கோவிலின் 70 ஏக்கர் நிலத்துக்குள் வால்மீகி, கேவத், சபரி, ஜடாயு, சீதை, விநாயகர், லட்சுமணன் ஆகியோருக்கும் கோவில்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் மக்ரானா மலையில் வெட்டி எடுக்கப்படும் மார்பிள் கற்கள், கோவில் கருவறைக்குள் பயன்படுத்தப்படுகின்றன.

2024-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதவாக்கில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நிலையில், அதற்கு 3 மாதங்களுக்கு முன்பு ராமர் கோவில், பக்தர்களுக்கு திறக்கப்படுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.


Next Story