அமித்ஷாவுடன் ரமேஷ் ஜார்கிகோளி இன்று சந்திப்பு


அமித்ஷாவுடன் ரமேஷ் ஜார்கிகோளி இன்று சந்திப்பு
x
தினத்தந்தி 3 Feb 2023 12:15 AM IST (Updated: 3 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆபாச சி.டி. விவகாரத்தை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வலியுறுத்தி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி இன்று (வெள்ளிக்கிழமை) சந்திக்க இருக்கிறார். டி.கே.சிவக்குமாருக்கு எதிரான ஆதாரங்களை அவர் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பெங்களூரு:

டி.கே.சிவக்குமார் காரணம்

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பா.ஜனதா ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் ரமேஷ் ஜார்கிகோளி. இதையடுத்து, பா.ஜனதா ஆட்சியில் அவர் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்து வந்தார். ரமேஷ் ஜார்கிகோளி ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் ஆபாச சி.டி. வெளியானதால், அவர் தனது மந்திரி பதவியை இழந்தார். அதன்பிறகு, அவருக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், தன்னை அரசியலில் இருந்து ஒழிக்க ஆபாச சி.டி.யை தயாரித்து வெளியிட்டவர் டி.கே.சிவக்குமார் தான் என்று முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கூறி வருகிறார். மேலும் டி.கே.சிவக்குமார் பேசும் ஆடியோ ஆதாரங்களையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வெளியிட்டு இருந்தார்.

இன்று அமித்ஷாவுடன் சந்திப்பு

இந்த நிலையில் ஆபாச சி.டி. வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவ்வாறு ஒப்படைத்தால் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஆபாச சி.டி. விவகாரத்தில் டி.கே.சிவக்குமாருக்கு எதிரான ஆதாரங்களை அளிப்பேன் என்றும் ரமேஷ் ஜார்கிகோளி கூறி வருகிறார். அத்துடன் சி.பி.ஐ. விசாரணை கோரி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை ரமேஷ் ஜார்கிகோளி சந்தித்து பேசி இருந்தார்.

இந்த நிலையில், ஆபாச சி.டி. விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) ரமேஷ் ஜார்கிகோளி சந்தித்து பேச உள்ளதாகவும், இதற்காக அவர் டெல்லிக்கு சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது. அதாவது ஆபாச சி.டி. விவகாரத்தை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அமித்ஷாவை சந்தித்து ரமேஷ் ஜார்கிகோளி கோரிக்கை விடுக்க உள்ளதாக தெரிகிறது. அத்துடன் இந்த விவகாரத்தில் டி.கே.சிவக்குமாருக்கு எதிரான ஆதாரங்களையும் அமித்ஷாவிடம் அவர் வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story