கார் விபத்தில் ரிசர்வ் வங்கி ஊழியர் பலி மனைவி, குழந்தைகள் காயத்துடன் உயிர் தப்பினர்


கார் விபத்தில் ரிசர்வ் வங்கி ஊழியர் பலி மனைவி, குழந்தைகள் காயத்துடன் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 17 Jun 2023 5:15 AM IST (Updated: 17 Jun 2023 5:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநகரில் தறிகெட்டு ஓடிய கார் தடுப்பு கம்பியை உடைத்துக்கொண்டு இணைப்பு சாலையில் விழுந்தது.

பெங்களூரு,

ராமநகரில் தறிகெட்டு ஓடிய கார் தடுப்பு கம்பியை உடைத்துக்கொண்டு இணைப்பு சாலையில் விழுந்தது. இந்த கோர விபத்தில் ரிசர்வ் வங்கி ஊழியர் பலியானார். அவரது மனைவி, குழந்தைகள் காயத்துடன் உயிர் தப்பினர்.

மைசூரு டவுனில் ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்குவதற்காக ஆலை வளாகத்திலேயே குடியிருப்பு உள்ளது. அதுபோல் மைசூரு ரிசர்வ் வங்கி ஆலையில் வேலை பார்த்து வந்தவர் ஜெகதீஷ் (வயது 48). இவரது மனைவி நந்திதா. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஜெகதீஷ், மனைவி, குழந்தைகளுடன் அந்த ஆலை குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஜெகதீஷ் காரில் மனைவி, 2 குழந்தைகளுடன் பெங்களூரு நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ராமநகர் டவுனில் உள்ள டி.பி.எல். அலுவலகம் அருகே மைசூரு-பெங்களூரு விரைவுச்சாலையில் வந்த போது ஜெகதீஷின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடியது. மேலும் சாலை தடுப்பு கம்பியை உடைத்துக்கொண்டு அருகில் கீழே இருந்த இணைப்பு சாலையில் பாய்ந்து விழுந்தது.

இதில் கார் பலத்த சேதமடைந்தது. இந்த கோர விபத்தில் காரை ஓட்டி வந்த ஜெகதீஷ் உடல் நசுங்கி பலத்த காயம் அடைந்தார். மேலும் அவருடன் முன் இருக்கையில் இருந்த நந்திதாவும் படுகாயமடைந்தார். பின் இருக்கையில் அமர்ந்திருந்த 2 குழந்தைகளும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதையடுத்து 4 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ராமநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ஜெகதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். நந்திதாவுக்கு பெங்களூரு கெங்கேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக ராமநகர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story