பிரகலாத் ஜோஷியை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க தயாரா?
சட்டசபை தேர்தலில் பிரகலாத்ஜோஷியை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க தயாரா? என்று பா.ஜனதாவுக்கு குமாரசாமி சவால் விடுத்துள்ளார்.
பெங்களூரு:-
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
விடமாட்டோம்
பி.எம்.எஸ். கல்வி அறக்கட்டளை அரசின் சொத்து. அதை தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயணும் ஒரு காரணம். இதற்கு தேவையான ஆதாரங்களை வெளியிட்டுள்ளோம். அந்த அறக்கட்டளையை நாங்கள் எக்காரணம் கொண்டும் விடமாட்டோம். ஜனதா தளம் (எஸ்) ஆட்சிக்கு வந்தால் அந்த அறக்கட்டளையை நாங்கள் அரசின் வசமே எடுத்து கொள்வோம்.
இதுகுறித்து விசாரணை நடத்துமாறு நான் சட்டசபையில் பேசினேன். ஆனால் அரசு அதை ஏற்கவில்லை. இந்த விவகாரத்தை நான் விட மாட்டேன். யாரோ ஒருவர் கொள்ளையடிக்க அந்த அறக்கட்டளையை அஸ்வத் நாராயண் வழங்கியுள்ளார். அவருக்கு வெட்கம் இல்லையா?. மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷியை முதல்-மந்திரி ஆக்க ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாக நான் கூறினேன். அவர் பிராமணர் வகுப்பில் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே பிரிவை சேர்ந்தவர். அந்த பிரிவு வன்முறையை தூண்டும் செயலை செய்கிறது.
குறை கூறவில்லை
அதனால் அந்த பிரிவை நான் குறை கூறினேன். ஒட்டுமொத்த பிராமணர் வகுப்பை நான் குறை கூறவில்லை. மற்ற பிராமணர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அதனால் பிரகலாத்ஜோஷி குறித்து நான் கூறிய கருத்தை வாபஸ் பெற மாட்டேன். அதற்காக நான் மன்னிப்பும் கேட்க மாட்டேன். கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால் பிரகலாத்ஜோஷியை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவிக்க பா.ஜனதா தயாரா?.
தேர்தலில் வேறு ஒரு முகத்தை காட்டி ஓட்டுகளை வாங்கி கொண்டு பிரகலாத்ஜோஷியை முதல்-மந்திரியாக்க பா.ஜனதா சதி செய்கிறது. இந்த சதி குறித்து நான் மக்களிடம் கூறியுள்ளேன். இதில் என்ன தவறு உள்ளது?.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.