ஆந்திரா, தெலுங்கானாவிற்கு 'ரெட் அலார்ட்' - இந்திய வானிலை மையம்
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் அதிக கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெங்களூரு,
தென்மேற்கு பருவமழை காரணமாக வட மாநிலங்களிலும் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற தென்மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மத்திய மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடற்கரை ஒட்டிய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை அடுத்து தெலுங்கானா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல் ஆந்திரா மற்றும் மராட்டியம் மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அம்மாநில அரசு இரண்டு நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசை நோக்கி நகரத் தொடங்கியது.
இதன் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், கோவா ஆகிய மாநிலங்களுக்கு அதீத கன மழைக்கான ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு அதீத மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.