டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் கர்நாடக அலங்கார ஊர்தி நிராகரிப்பு


டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் கர்நாடக அலங்கார ஊர்தி நிராகரிப்பு
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் கர்நாடக அலங்கார ஊர்திக்கு இந்த ஆண்டு அனுமதி வழங்காமல் நிராகரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. டெல்லி விழாவில் கர்நாடக அலங்கார ஊர்தி இடம்பெற உரிய முயற்சி செய்வதாக மாநில அரசு கூறியுள்ளது.

பெங்களுரு:

கர்நாடக ஊர்தி நிராகரிப்பு

ஆண்டுதோறும் குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெறும். அந்த அணிவகுப்பில் கடந்த 13 ஆண்டுகளாக கர்நாடகத்தின் அலங்கார ஊர்தி இடம் பெற்று வந்தது. கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் கர்நாடகத்தின் கைவினை பொருட்களை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்தி இடம் பெற்றது. இதற்கு 2-வது இடம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் குடியரசு தின விழாவையொட்டி வருகிற 26-ந் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்கள் பங்கேற்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து 13 ஆண்டுகளாக பங்கேற்ற கர்நாடகத்திற்கு இந்த முறை அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது.

சிறுதானியங்கள்

இந்த முறை கர்நாடகம் சார்பில் சிறுதானியங்களை முன்னிறுத்தும் வகையில் அலங்கார ஊர்தியை இடம் பெற செய்ய மாநில அரசு முடிவு செய்தது. இதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள், "குடியரசு தின விழாவில் பங்கேற்க சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி நாங்கள் கர்நாடகத்தின் சிறுதானியங்களை முன்னிறுத்தும் வகையில் அலங்கார ஊர்தியை இடம் பெற செய்ய முடிவு செய்தோம்.

ஆரம்ப கட்டத்தில் எங்களின் திட்டத்திற்கு அனுமதி கிடைத்தது. ஆனால் இறுதி சுற்று போட்டியில் எங்களின் திட்டத்திற்கு அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த முறை கர்நாடகத்தின் ஊர்தி அணிவகுப்பில் இடம் பெறாது" என்றனர். இந்த நிலையில் குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடகத்திற்கு அனுமதி நிராகரிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி மற்றும் கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தனி அடையாளங்கள்

இதுகுறித்து காங்கிரசை சேர்ந்த டி.கே.சுரேஷ் எம்.பி. கூறியதாவது:-

கர்நாடகம் தனக்கென தனி அடையாளங்கள் மற்றும் கலாசாரத்தில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. கடந்த 13 ஆண்டுகளாக கர்நாடகம் தனது கலாசாரத்தை குடியரசு தின விழாவில் வெளிப்படுத்தி வந்தது. இந்த முறை கர்நாடகத்திற்கு அனுமதியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதன் மூலம் கர்நாடகத்திற்கு மத்திய பா.ஜனதா அரசு அநீதி இழைத்துள்ளது.

குஜராத்திற்கு வழங்கும் முக்கியத்துவத்தை மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குவது இல்லை. இந்த அவமானத்தை கன்னடர்கள் சகித்து கொள்ள மாட்டார்கள். விமான கண்காட்சியையும் வேறு மாநிலத்திற்கு மாற்ற முயற்சி செய்தனர். கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த முடிவை கைவிட்டனர். கர்நாடகத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்க கோரி பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகளுக்கு இங்குள்ள பா.ஜனதா எம்.பி.க்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு டி.கே.சுரேஷ் கூறினார்.

பல்வேறு கன்னட அமைப்புகளும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடகத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த அமைப்புகளின் நிர்வாகிகள் கோரியுள்ளனர்.

கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, "குடியரசு தின அணிவகுப்பில் கர்நாடகத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மத்திய மந்திரியிடம் பேசுவேன். கர்நாடகத்தின் ஊர்தியும் இடம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான முயற்சியை நான் மேற்கொள்வேன். கடந்த முறை நமது அலங்கார ஊர்திக்கு 2-வது பரிசு கிடைத்தது" என்றார்.


Next Story